பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட உள்ள ஊழல் பட்டியலில் யாருடைய பெயர் வரப்போகிறதோ என்ற அச்சத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளனர் என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் வேலூர் இப்ராஹீம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் மோசடி அரசை நடத்தி வருகிறது. தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்டம் வாரியாக பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். திருச்சியில் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம். பிற நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் 16 சதவீதம் மட்டுமே பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் 9 கோடி ஏழை, எளிய மக்களுக்கு ரூ. 200 விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக அரசு சொன்னபடி காஸ் சிலிண்டருக்கு ரூ.100 கூட குறைக்கவில்லை. தமிழகத்தில் திமுக அரசை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். தமிழகத்தில் குற்றவாளிகள் பெருகி வருகிறார்கள். கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கூலிப்படைகள், கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விடும். இதற்காகவே கடந்த காலங்களை போல் திமுக ஆட்சி கலைக்கப்படலாம். மக்களாட்சியில் இருந்து மீண்டும் மன்னராட்சியாகத்தான் திமுகவினரின் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது.

தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்துக்கொண்டு வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட உள்ள ஊழல் பட்டியலில் யாருடைய பெயர் வரப்போகிறதோ என்ற அச்சத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளனர். இளைஞர்கள் எல்லாம் பாஜகவுக்கு சென்று விடுவார்களோ என திமுகவினர் மட்டுமல்ல, பாமக நிறுவனர் ராமதாஸ்கூட பயப்படுகிறார்கள்” என்று வேலூர் இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.
