மத்திய அரசு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. ஆனால். வாக்குறுதிகளை அளிக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது.
எங்கள் கட்சி ஆதரவாளர்களைத் திரும்பத் திரும்ப கைது செய்வதன் மூலம் பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும் கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் அளித்து ஆட்சிக்கு வந்ததோ, அந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே, திமுக அளித்த வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக மத்திய அரசு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. ஆனால். வாக்குறுதிகளை அளிக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. திமுக அரசு திரும்பத் திரும்ப பாஜக ஆதரவாளர்களை கைது செய்கிறது. இதன் வாயிலாக பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது.

விசாரணை முடிந்த நிலையிலும்கூட நள்ளிரவில் தீவிரவாதியை போல ஒருவரை கைது செய்வதுதான் கருத்து சுதந்திரமா? இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் எடுக்கும் முயற்சிகள் மூலம் பாஜகவின் ஆதரவாளர்களை முடக்கிவிடலாம் என்று நினைத்தால் அந்தக் கனவு ஒரு போதும் பலிக்காது. தேசியக் கொடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த நாட்டில் மாறாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருப்பதை எல்லாம் ஒருபோதும் பாஜக மாற்ற நினைக்காது.” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதையடுத்து பாஜக மாநில தமிழகத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வானதி சீனிவாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
