பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு பெரிதும் உதவுகிறது என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவாளர்களை அடிக்கடி கைது செய்வதன் மூலம் மாநில அரசு மறைமுகமாக பாஜக வளர்ச்சிக்கு உதவிசெய்கிறது என வானதி விமர்சித்தார்.
பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு பெரிதும் உதவுகிறது என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவாளர்களை அடிக்கடி கைது செய்வதன் மூலம் மாநில அரசு மறைமுகமாக பாஜக வளர்ச்சிக்கு உதவிசெய்கிறது என வானதி விமர்சித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவினர் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலை தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து பாஜகவினர் கூறிவருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால சாதனையை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மோடி பிரதமரானது முதல் மாற்றங்கள் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். உலக நாடுகளை கொரோனா தீவிரமாக அச்சுறுத்தி வந்த சூழ்நிலையில் இந்தியாவிலேயே தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதை இந்திய மக்களுக்கு இலவசமாக வழங்கிய பிரதமர் நம் பிரதமர் மோடி என்றார். நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்த அனைவருக்கும் வங்கி திட்டம் ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி என்றார். பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பலன் அடைந்துள்ளன, வங்கி கடன் அதிகம் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது, அனைவருக்கும் வீடு, செல்வமகள் திட்டம் உள்ளிட்டவற்றால் தமிழகம் பயனடைந்து உள்ளது என்றார்.
முத்தலாக் தடை சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு திருமண உறவில் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், மத்திய அமைச்சரவையில் அதிக பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்திய ராணுவத்திடம் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் வானது கூறினார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என தெரிவித்த அவர், ஆனால் வாக்குறுதியே கொடுக்காமல் இதுவரை 2 முறை பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது என்றார். பாஜக ஆதரவாளரான யூடியூப் கார்த்தி கோபிநாத் கைது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், திரும்பத்திரும்ப பாஜக ஆதரவாளர்கள் கைது செய்வதன் மூலம் பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு மறைமுகமாக உதவி செய்கிறது என்றார்.

கருத்துச் சுதந்திரத்தை சட்டத்துக்குட்பட்டு சொல்வதற்கும், அப்படி சொல்பவர்களை தீவிரவாதிகளை போல கைது செய்வது தான் மாநிலத்தின் கருத்து சுதந்திரமா என கேள்வி எழுப்பினார். திமுக அரசின் நடவடிக்கைகளை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், கைது நடவடிக்கை மூலம் பாஜக ஆதரவாளர்களை முடக்கி விடலாம் என நினைத்தால் அது கனவில் கூட நடக்காது என்றும் வானதி கூறினார்.
