வானிலை மையத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் வெள்ள பாதிப்பு.. திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிசாமி.!
அதிமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டு, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்த மண்டலங்களுக்கு சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு, அங்கிருக்கும் பகுதிகளில் வடிகால் பகுதிகளில் எங்கெல்லாம் தூர்வார வேண்டும்? எங்கெல்லாம் அடைப்புகளை அகற்ற வேண்டும்?
திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த காலத்தில் எந்த மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதி செய்திருக்கிறோம் என்று வீரவசனம் பேசினார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை திமுக அரசு அலட்சியப்படுத்தியதால்தான் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு திமுக அரசே முழு பொறுப்பு. புயல், மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிப்புக்குள்ளாகி 5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மழைநீர் வடிகாலால் ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என்று கூறினார்கள். ஆனால் சென்னையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் மேயரை முற்றுகையிட்டு மக்கள் சரமாரி கேள்வி எழுப்பியிருக்க மாட்டார்கள். பால் தட்டுப்பாட்டை தவிர்க்க முன்னேற்பாடாக பால் பவுடர் விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டு, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்த மண்டலங்களுக்கு சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு, அங்கிருக்கும் பகுதிகளில் வடிகால் பகுதிகளில் எங்கெல்லாம் தூர்வார வேண்டும்? எங்கெல்லாம் அடைப்புகளை அகற்ற வேண்டும்? என்று கணக்கெடுத்து உடனுக்குடன் தூர்வாரி அடைப்புகளை நீக்கிய காரணத்தால் மழைகாலத்தில் தண்ணீர் தேங்காமல் விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது.
அதிமுக ஆட்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ உதவிகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும் செய்து கொடுத்தோம். அதிமுக ஆட்சி காலத்தில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முறையாக நடைபெற்று வந்தன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. புயல் குறித்து முன்னேற்பாடுகளை செய்யாமல் தற்போது பொம்மை போல் பார்வையிட்டு வருகிறார். மத்திய அரசு அளித்த நிதியை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் சாலைகளை சரி செய்ய வேண்டும். மழை வெள்ளம் தேங்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த காலத்தில் எந்த மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதி செய்திருக்கிறோம் என்று வீரவசனம் பேசினார்கள். தண்ணீர் தேங்காத இடமே கிடையாது. எங்கள் கட்சி அலுவலகத்தில் கூட ஒன்றரை அடி தண்ணீர் நிற்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.