தமிழகத்தில் 70 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை. மக்களை நம்பிதான் அரசியல் செய்கிறார் என்று மத்திய இணையமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.

திமுக அரசுக்கு எதிராக தமிழக பாஜக நாள்தோறும் விமர்சனக் கணைகளைத் தொடுத்து வருகிறது. அந்த வகையில் திமுக அரசின் மீது ஊழல் புகார்களை வெளியிட இருப்பதாகவும் இதனால் இரு அமைச்சர்கள் பதவி இழப்பார்கள் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி இரு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை திமுக அரசின் மீது ஊழல் புகாரை கூறினார். மக்கள் நல் வாழ்வு மற்றும் மருத்துவத் துறையில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஹெல்த் மிக்ஸ் திட்டத்தில் தமிழக அரசுக்கு ரூ. 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்டர் பெற்ற நிறுவனம் சார்பில் 100 கோடி பணம் கைமாறியுள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதேபோல சி.எம்.டி.ஏ.வில் ஜி ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு காட்டப்படும் சலுகைகள் குறித்தும் அண்ணாமலை புகார் கூறியிருந்தார்.

தமிழகத்தில் திமுக - அதிமுக ஆட்சி மாறி மாறி அமையும்போது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிமுக ஆட்சியில் இருந்தால் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக வெளியிடும். இதேபோல திமுக ஆட்சியில் இருந்தால் அதிமுக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லும். ஆனால், இந்த முறை பாஜக ஊழல் குற்றச்சாட்டைக் கூறியது. திமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிடுவேன் என்று அண்ணாமலை நாள்தோறும் பேசி வருகிறார். திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்த கட்சிகள், இருக்கும் கட்சிகள். எனவே, தங்கள் ஆதரவு அதிகாரிகள், ஊழலுக்கு எதிரானவர்கள், சமூக நல ஆர்வலர்கள் போன்றவர்களுக்கு தங்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்களை பிரதான எதிர்க்கட்சியின் பார்வைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். அதாவது யாரிடம் முறைகேடுகள் பற்றி சொன்னால் அது பொதுவெளியில் பேசப்படும் என்பதை அறிந்து ஆதாரங்களை தருவார்கள். பாஜக மூலம் இதுபோன்ற புகார்கள் பேசப்படுவதால் அதிமுகவையே அக்கட்சி ஓவர் டேக் செய்துவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடைபெற்ற பாஜக அரசின் சாதனை விளக்க பொது கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் இதுபற்றி பேசியிருக்கிறார். முரளிதரன் பேசுகையில், “திமுக அரசின் ஊழல் குறித்து அண்மையில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அண்ணாமலைக்கு தகவல்கள் கொடுத்தவர்கள். அதனால்தான் அதிகாரிகளை திமுக அரசு உடனடியாக மாற்றியுள்ளது. தமிழகத்தில் 70 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை. மக்களை நம்பிதான் அரசியல் செய்கிறார். அதிகாரிகளை மாற்றினாலும் திமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அண்ணாமலையின் பணி தொடரும்” என்று முரளிதன் பேசினார்.