தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால், கூடுதலாக ஒரு மாநிலங்களவை பதவியை அக்கட்சியால் பெற முடியும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசு அதிகபட்சம் 9 தொகுதிகளில் வென்றால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதனால், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கப் போகிறது.
அதே வேளையில் இந்த இடைத்தேர்தலில் திமுக முழுமையாக வெற்றி பெற்றால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்படும். அதைத் தாண்டி இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு அரிய வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது. இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால், கூடுதலாக ஒரு மாநிலங்களவை பதவியை அக்கட்சியால் பெற முடியும்.
வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போது திமுக கூட்டணிக்கு 97 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதை வைத்து இரண்டு மாநிலங்களவைப் பதவியை எளிதாகப் பெற முடியும். அதேவேளையில் இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றால், மூன்று மாநிலங்களவைப் பதவியை திமுகவால் பெற முடியும்.
கடந்த 2016-ல் எண்ணிக்கை குறைவாக இருந்தால்தான் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி என இருவரை மட்டுமே மாநிலங்களவை தேர்தலில் திமுகவால் நிறுத்த முடிந்தது. தற்போது கூடுதலாக ஒரு உறுப்பினர் பதவியைப் பிடிக்க திமுகவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவியை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், திமுக இரண்டு மாநிலங்களவை பதவியைப் பெற வேண்டுமென்றால், இடைத்தேர்தலில் திமுக 5 தொகுதிகளில் வெல்ல வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிமுகவிடமிருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக பறிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அதற்கு இடைத்தேர்தலில் திமுக பெர்ஃபார்மென்ஸ் பண்ண வேண்டும்!