திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பு தற்போது 4000ஐ தாண்டி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா ஏற்பட்டது. அதேபோல், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு தொற்று ஏற்பட்டு நேற்று வீடு திரும்பினார். 

இந்நிலையில், 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தற்போது, அவர் வீட்டு தனிமையில் இருந்து வருகிறார். எனவே அவர் கவனமாக இருக்கும் படி திமுக தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், அறிகுறி ஏதுவும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.பரிசோதனை முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது.