முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 10-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வருடத்துக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூடும் என க.அன்பழகன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த சமயத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கழக ஆக்கப்பணிகள், கழக சட்ட திட்ட திருத்தம், தணிக்கை குழு அறிக்கை பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடைபெற இருப்பதால் அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.  

திமுக முக்கிய சில பொறுப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது பொதுச்செயலாளராக உள்ள அன்பழகன் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், இணைபொதுச்செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர், கடந்த வருடம் ஆகஸ்ட் 28-ம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ஓராண்டு பின்னர் மீ்ண்டும் திமுக பொதுக்குழு கூட்டம் என்பது முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.