சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வரும் முன்பே பரபரப்பு மையம் கொள்ளத் தொடங்கிவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில், அதிமுக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதாகக் கூறி பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.
இவர்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்வதன்மூலம் எண்ணிக்கை குறைந்து ஆட்சியைத் தக்கவைத்துகொள்ள முடியும் என்பது அதிமுகவின் கணக்கு. அதிமுக கொறடா சார்பில் புகார் அளிக்கப்பட்ட உடனே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்தார். மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தால், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று ஸ்டாலின்  தெரிவித்திருந்தார்.

 
இந்நிலையில் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள தனபால், மூவரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவை செயலாளரைச் சந்தித்து திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. திமுக எம்.பி. ஆலந்தூர் பாரதி. திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் ஆகியோர் இந்த மனுவை அளித்துள்ளார்கள்.