கடந்த 2018-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தபோது பாஜக - அதிமுக போன்ற கட்சிகளை திமுக அழைக்கவில்லை.
டெல்லியில் நடைபெற உள்ள திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு அதிமுகவுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் திமுக அலுவலகம்
நாட்டின் தலைநகர் டெல்லியில் திமுக கட்சி அலுவலகத்தை 'அண்ணா - கலைஞர்’ அறிவாலயம் என்ற பெயரில் எழுப்பியுள்ளது. இந்த அலுவலகத்தை கடந்த ஜனவரியில் திறக்க திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. ஆனால், அப்போது கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகப் பரவியதால், திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி திமுக அலுவலகம் ஏப்ரல் 2 அன்று திறக்கப்பட உள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் உள்ள பிற கட்சித் தலைவர்களுக்கும் திமுக சார்பில் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.

அமித்ஷாவுக்கு அழைப்பு
டெல்லியில் திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக திமுக நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக முன்னாள் தேசிய செயலாளரும் மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்து திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதேபோல தொழில் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும் அழைப்பிதழ் அனுப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தபோது பாஜக - அதிமுக போன்ற கட்சிகளை திமுக அழைக்கவில்லை.
பிரதமர் மோடி, அதிமுகவுக்கும் அழைப்பு

இந்நிலையில் டெல்லி கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு பாஜக மட்டும் திமுக அழைக்கவில்லை. அதிமுகவையும் அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது” என்று திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இதேபோல குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மத்திய அமைச்சர்கள், அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் திமுக சார்பில் எம்.பி.க்கள் குழு அழைப்பிதழை வழங்கியுள்ளதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவரான டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியிலான மரியாதையாக கருதுவதால், கட்சி வித்தியாசம் பார்க்காமல் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் நட்பை கடைபிடிக்கும் வகையில் டெல்லி கட்சி அலுவலக திறப்பு விழாவை திமுக பயன்படுத்திக்கொள்வதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
