மிசாவில் கைது செய்யப்பட்டு மு.க. ஸ்டாலின் சென்னை சிறைச்சாலையில் அனுபவித்தா சித்திரவதைகளை திமுகவினர் பகிரத் தொடங்கியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 1976-ல் மிசாவில் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியை ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சியில் எழுப்பி நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும். அந்தப் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், “மு.க. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை. வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் .எதற்காக தான் கைது செய்யப்பட்டேன் என்று அவரே சொல்வது நல்லது” என்று தெரிவித்தார். 
இதற்கு திமுகவினர் கடும் எதிர்வினையாற்றினர். அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதையடுத்து, பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் அக்கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். இதன்பிறகு மு.க. ஸ்டாலின் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து இரு நாட்களில் ஆதாரத்துடன் தெரிவிப்பதாகச் சொன்னதாக செய்திகள் வெளியாயின.
 இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மிசா தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துப் பகிர்ந்துகொண்ட அனுபவத்தையும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’  நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளி வந்தது. மிசா கைது தொடர்புடைய பகுதியை மனுஷ்யபுத்திரன் நடத்திவரும் உயிர்மை இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் மிசா காலத்தில் தான் கைது செய்யப்பட்டது பற்றியும் சென்னையில் நடந்த கொடுமைகள் குறித்தும் ஸ்டாலின் சொன்ன கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல துர்கா ஸ்டாலின் பகிர்ந்துகொண்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
 அதை திமுக தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியிலும் அப்படியே பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து சமூக ஊடகங்களில் புழங்கும் திமுகவினரும் அந்தத் தகவல்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சர்ச்சை இப்போதைக்கு ஓயாதுபோல!