சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான ஸ்டாலினை அழைத்து செல்ல முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஸ்டாலினை அழைத்து செல்லும் வாகனத்தின் மீது தொண்டர்கள் ஏறியும் வாகனத்தை முற்றுகையிட்டும் உள்ளதால், ஸ்டாலினை அழைத்து செல்ல முடியாமல் போலீசார் திணறிவருகின்றனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் தமிழக விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் உறுதியாக உள்ளனர். காவிரி விவகாரத்தில் வேறுபாட்டை கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்று கூடியுள்ளனர். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்ற வணிகர் சங்கங்கள் இன்று கடைகளை அடைத்துள்ளனர். முழு அடைப்பின் காரணமாக தமிழகமே வெறிச்சோடி காணப்படுகிறது. 

முழு அடைப்பிற்கு சில போக்குவரத்து கழகங்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், ஆளுங்கட்சி தொழிற்சங்க ஊழியர்கள் பணிக்கு சென்றதால் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. 

முழு அடைப்பு மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை, மெரினா சாலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை முடக்கப்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்றவர்கள், மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஸ்டாலினை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டாலினை கைது செய்து அழைத்து சென்ற வாகனத்தின் மீது திமுக, விசிக தொண்டர்கள் ஏறினர். ஸ்டாலினை அழைத்து சென்ற வாகனத்தை தொண்டர்கள் முற்றுகையிட்டு செல்கின்றனர். வாகனத்திற்கு முன்னும் பின்னும் தொண்டர்கள் சூழ்ந்துள்ளனர். இதனால், ஸ்டாலினை அழைத்து செல்ல முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.