செவிவழியாக கேட்ட தகவலை அவசரத்தில் அள்ளி தெளித்த கோலமாக மு.க.ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்று அறிக்கை விட்டு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். மேலும்,  துணை முதல்வர் ஓபிஎஸ் கீழ் இயங்கி வரும் கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில், அவரது 2 மகன்கள் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனம் திட்டம் ஒன்றிற்கு அனுமதி கோரியிருப்பது அதிகார துஷ்பிரயோகம் எனவும் கூறியிருந்தார். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த குற்றச்சாட்டை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில்;- நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ஊழல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுவது வேடிக்கையாக  உள்ளது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சி தான் என்பதை நாடே அறியும். திமுக தலைவர் ஊழல் தொடர்பான அறிக்கை விடுவது சாத்தான் வேதம் ஒதுவது போல உள்ளது. 

ஊரடங்கு நேரத்தில் மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அரசை குறை கூறி வருகிறார். ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறுவதை கண்டிக்கிறேன். செவிவழியாக கேட்ட தகவலை அவசரத்தில் அள்ளி தெளித்த கோலமாக கருத்து கூறியிருக்கிறார். பிப்ரவரியில் மின்னணு முறையில் கோரப்பட்ட ஒப்பந்த புள்ளி அப்படியேதான் உள்ளது. ஒப்பநத புள்ளி கோரப்பட்டதில் எவ்வித நடைமுறைகளும் மீறப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.