அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்பாட்டத்தினை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியது நிச்சயம் நினைவிலிருக்கும். அறவழிப்போராட்டம் நடத்திய  அரசு ஊழியர்களை போலீஸை கொண்டு புரட்டி எடுத்தது, ஆசிரியைகளை மண்டபங்களில் சிறைப்படுத்தி நள்ளிரவு வரை தவிக்கவிட்டது என்று படுத்தி எடுத்தது அரசு. 

‘தேர்தல் வரட்டும் உங்களை வெச்சு செய்றோம்’ என்று அப்போது கருவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். அதை இப்போது அப்படியே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்களாம். ஆம், மாவட்ட அரசு அலுவலகங்களில் துவங்கி சென்னை தலைமை செயலகம் வரை அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட துவங்கிவிட்டனர் என்று பெரும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. 

விவசாயம், கல்வி, மின்சாரம், உள்ளாட்சி என்று பல துறைகளிலும் அனுமதி உள்ளிட்ட பல விஷயங்களை வேண்டி வரும் ஆளுங்கட்சியினரை மதிப்பதேயில்லையாம் அரசு அதிகாரிகள். மீறி மீசையை முறுக்கினால் ‘என்ன? ஆளுங்கட்சின்னு சொல்லப்போறீங்களா! அந்த பந்தாவெல்லாம் இன்னும் பத்து நாளைக்குதான். மே 23, 24ல் துடைச்சு தூக்கி எறியப்போறாங்க மக்கள். அப்ளிகேஷனை எடுத்துட்டு கெளம்பிடுங்க.’ என்று வெளிப்படையாகவே வெளுத்தெடுக்கிறார்களாம். ‘அமைச்சரிடம் சொல்வேன்.’ என்று சொன்னால், ‘தாராளமா. எந்த கவலையும் இல்ல எங்களுக்கு’ என்று பதில் வருகிறதாம். 

இது எல்லா அமைச்சர்களின் கவனத்துக்கும் போக, சென்னை எடப்பாடியார் முதல் ராமநாதபுரம் மணிகண்டன் வரை அத்தனை பேரும் நொந்து நூடுல்ஸாகி விட்டார்களாம். ஆட்சியில் இருக்கும் தங்களை அரசு அதிகாரிகள் அலட்சியமாய் நடத்துவது பற்றி ஓப்பனாக பேசும் அ.தி.மு.க.வின் தலைமைக்கழக பேச்சாளரான புலவர் செல்வராஜ் “மக்களின் நியாயமான, பழைய கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் இழுத்தடித்தும், தவிர்த்தும் இந்த அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துக்கிறார்கள் அரசு முக்கிய அதிகாரிகள் சிலர். இவர்கள் தி.மு.க.வின் அனுதாபிகள். ‘தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது.’ என்று கனவில் மிதக்கிறார்கள். ஆனால் அது நிச்சயம் பலிக்கப்போவதில்லை. மே 23-க்கு பிறகும் எடப்பாடியாரின் ஆட்சியே தொடரும். 

ஆட்டம் போடும் அரசு அதிகாரிகளை அடையாளம் கண்டு வைத்துள்ளோம். மக்கள் நலனை புறக்கணித்தும், அரசியல் காழ்ப்புணர்வோடு செயல்படுவதாலும் அவர்களுக்கு நிச்சயம் கடும் நடவடிக்கை காத்திருக்கிறது.” என்கிறார் புலம்பலும், ஆத்திரமும் ஒன்று சேர. 

ஆனால் அரசு ஊழியர்களின் சங்க நிர்வாகிகளோ அந்த விமர்சனத்தை மறுத்து, ‘நாங்கள் வழக்கம்போல் மக்கள் பணி செய்கிறோம்.’ என்கிறார்கள். 

ஆனால், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு உயரதிகாரிகள் என இரு தரப்புக்கும் நடுவில் நிற்கும் அரசியல் விமர்சகர்களோ “கோட்டையில் இப்போதே தி.மு.க.வின் ஆதரவு கொடி பறக்க துவங்கிவிட்டது. ஆளுங்கட்சி புள்ளிகளின் உத்தரவை அரசு அதிகாரிகள் மதிப்பதேயில்லை. அமைச்சர்களுக்கு கூட பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. நியாயமான போராட்டத்தின் போது தங்களை படுத்தி எடுத்ததற்காக இப்போது பழி வாங்குகிறார்கள். நிச்சயம் தி.மு.க. ஆட்சி வந்துவிடும் என்று நம்புகிறார்கள் அரசு ஊழியர்கள். 

தேர்தல் முடிவு எப்படி இருக்கப்போகிறதோ! ஆனால் இந்த விஷப்பரிட்சையில் விரும்பி இறங்கியிருக்கும் அரசு அதிகாரிகளின் துணிவு வியக்க வைக்கிறது.” என்கிறார்கள். 
கவர்மெண்டு ஊழியர்னா கெத்துதானப்பா!