dmk filed caveat petition in supreme court against semmalai petition
ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று செம்மலை மனுதாக்கல் செய்திருந்தால் அந்த மனுவில் தங்களை எதிர்தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அப்போது அதிருப்தியிலிருந்த ஓபிஎஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த 12 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 12 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என அந்த 12 எம்.எல்.ஏக்களில் ஒருவரான செம்மலை, உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று செம்மலை மனு தாக்கல் செய்திருந்தால், அந்த மனுவில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தங்களிடம் தெரிவிக்காமல் அந்த வழக்கை விசாரிக்கக்கூடாது எனவும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
