தொகுதி மறுவரையறைப் பணிகளை முடிக்காமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு கெடு விதித்தது. டிசம்பர் 13-க்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இன்றுகூட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் கூட்டியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலேயே இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை. ஆகவே, தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.