நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கமிஷன் அமைப்பது தான் என்று திருச்சி உண்ணாவிரத போராட்டம் நிறைவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டசபையில் திமுகவினர் வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சியில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஸ்டாலின் பேசியதாவது.:
யார் முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்த வேண்டும் என்று மக்கள் ஆதரவளித்தார்கள். ஜெயலலிதா தலைமைற்க ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார்கள். இந்த கும்பல் பொறுப்பேற்க அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் ஆட்சியை செயல்படுத்தக்கூடிய ரிமோட் , குற்றவாளிகள் உள்ள பெங்களூர் சிறையில் உள்ளதே. எடுபிடி பழனிச்சாமி என்று இன்றைக்கு வாட்ஸ் அப்பில் அறிவிக்கிறார்கள் , எதையும் நான் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்.
ஓபிஎஸ் நீதி விசாரணை வேண்டும் என அறிவித்தாரே. என் தலைவிக்காக நான் பொறுப்பேற்ற பின்னர் நானும் அதையே வலியுறுத்துகிறேன் என்று கூற வேண்டியது தானே.
விசாரணை கமிஷன் அமைக்கத்தயாரா? தைரியம் இருக்கிறதா? உங்கள் தலைவிதானே. ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டீர்களே ஆறாவதாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டியது தானே.
அப்படி அறிவித்தால் யார் யார் சிக்குவார்கள் என்ற கதை தனி. சிறையில் இருந்து இயக்கப்படக் கூடிய பினாமி ஆட்சியாக இருக்கும் இந்த ஆட்சியில் அதெல்லாம் நடக்காது . அடுத்து அமைகிற திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் பல கையெழுத்திட உள்ள நிலையில் முதல் கையெழுத்து ஜெயலலிதா மறைவுக்கு நீதி விசாரணை அமைக்கும் கையெழுத்து தான்.
இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அப்படி அமைத்தால் எத்தனை பேர் சிக்குவார்கள் தெரியுமா , யார் யாரெல்லாம் சிக்க போகிறார்கள் என்பது தெரிய வரும். திமுக இந்த ஆட்சியை கவிழ்க்க விரும்பவில்லை. அப்படி செய்திருக்க நினைத்திருந்தால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே ஆரம்பித்திருப்போம்.
மக்கள் எங்களைத்தான் நம்புகிறார்கள். மக்கள் எங்களை திட்டுகிறார்கள் . ஒரு 20 எம்.எல். ஏக்களை உங்களால் பிடிக்க முடியவில்லையா என்று கேட்கிறார்கள். என் வீட்டில் உள்ள பெண்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது. கட்சித்தாவல் தடைச்சட்டம் பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியுமா?
சபாநாயகர் பதவியேற்றபோது நாங்கள் தானே கையை பிடித்து அழைத்து சென்று அமர வைத்தோம். அன்று என்ன சொன்னேன் . எதிர்கட்சியாக செயல்படுவொம். எதிரிகட்சியாக செயல்பட மாட்டோம் என்று சொன்னேன்,. அதை செய்து காட்டினோமா இல்லையா? நீட் தேர்வு உள்ளிட்ட பல விவகாரங்களில் துணை நின்றோம்.
பல திட்டங்களில் நாங்கள் ஆதரித்து துணையாக நின்றோமே. அதன் பின்னர் ஓபிஎஸ் முதல்வராக வந்த பின்னரும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நாங்கள் துணை நின்றோமே.
ஜெயலலிதா முதல்வராக இருந்து சிறை சென்றபோது அவர் வழி காட்டக்கூடிய தலைவர் ஓபிஎஸ் முதல்வரானார். இன்று சசிகலா பதவி ஏற்றபோது அவர் வழிகாட்டக்கூடிய தலைவர் எடப்பாடி முதல்வராகிறார், எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?
இதை மாற்றும் தலைமை வராதா என்ற கேள்வி எழுகிறது. அன்று சட்டமன்றத்தில் என்ன நடந்தது , அதன் பின்னர் நடந்த பிரச்சனை எங்களை வெளியேற்றிவிட்டு ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்கள்.
இன்றைய தினம் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. வீடியோ ஆதாரங்களை கேட்டுள்ளனர். இவர்கள் ஆட்சியில் வீடியோவை எப்படி வெட்டி ஒட்டுவார்கள் தெரியாதா? காவல்துறை என்ன செய்கிறது என்றால் ஒன்று கூவத்தூரில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் , இல்லாவிடட்டால் சட்டசபையில் வெள்ளை ஆடை அணிந்து எங்களை தாக்கத்தெரியும். தமிழகத்தில் சட்ட்ம் ஒழுங்கை காக்க என்ன செய்கிறது.
சின்னஞ்சிறிய குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படும் அவலம் நடக்கிறது. ஆனால் இவர் ஸ்கூட்டி தருகிறாராம். நீங்கள் நேற்று அறிவித்த திட்டத்தில் புதிதாக என்ன இருக்கிறது.
இவர் மட்டுமல்ல , ஜெயலலிதா , ஓபிஎஸ் அறிவித்த எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. நான் கேட்கிறேன் ஜெயலலிதா 500 டாஸ்மாக் கடைகளை மூடுகிறேன் என்று கையெழுத்திட்டாரே அவை எந்தெந்த கடைகள் என வெள்ளை அறிக்கை வெளியிடத்தயாரா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
