நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருக்க வேண்டாம் என்று தெற்கு மண்டல நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 16வது சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு 2021 மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளை தொடங்க அகில இந்திய தேர்தல் ஆணையம் தயாராகிவருகிறது.  அதன்படி ஊரடங்கு முடிவடைந்ததும் அடுத்த மாதம் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, வரும் நவம்பரில்  பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் தேர்தல் ஆணையம் 2021-ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் தமிழகம், புதுச்சேரி, கேரளா மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வரும் நிலையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

அதே நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளும் தற்போதைய தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகளான அதிமுக- திமுக இரண்டு கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுகவின் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின். கடந்த 10 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லா விட்டாலும் மக்களுக்காக சேவையாற்றியுள்ளோம். மக்களும் நமக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். இருப்பினும்  நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மமதையில் நாம் இருக்க வேண்டாம். 

நமக்கான வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் பெறவேண்டியது உங்களுடைய கடமை என பேசியுள்ளார்.  மேலும் வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இருக்கவேண்டும் எனவும் அதே சமயத்தில் காங்கிரசுக்கு கடந்த தேர்தல்களில் விட்டுக்கொடுத்த சில தொகுதிகளை நாம் இந்த முறை நமக்கு கேட்டுப் பெறவேண்டும் என நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். அதற்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை யின்போது அது குறித்து பேசுவோம் என ஸ்டாலின், நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.