தி.மு.க தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர செயற்குழுவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தாமதமாக வந்ததுடன், மேடையில் பேசவும் மறுத்துவிட்டது தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 1969ம் ஆண்டு தி.மு.கவின் தலைவராக கலைஞர் பதவி ஏற்றது முதல் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தவர் பேராசிரியர் அன்பழகன். தனக்கு உற்ற தோழனாக விளங்கிய காரணத்தினால் தி.மு.கவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாக கருதப்படும் பொதுச் செயலாளர் பதவியில் அன்பழகனை கடந்த 1977ம் ஆண்டு உட்கார வைத்து அழகு பார்த்தார் கலைஞர். அன்று முதல் தற்போது வரை தி.மு.க பொதுச் செயலாளராக அன்பழகன் இருந்து வருகிறார்

.

கலைஞருக்கு நெருக்கமான நண்பராக மட்டும் இல்லாமல் நெருக்கடியான சூழலில் ஆலோசனை கூறுபவராகவும் அன்பழகன் திகழ்ந்து வந்தார். கலைஞர் எந்த அளவிற்கு அன்பழகனிடம் மரியாதை காட்டி பழகி வந்தாரோ அதே அளவிற்கு ஸ்டாலினும் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவராகவே இதுநாள் வரை இருந்து வந்தார். ஆனால் தி.மு.கவின் செயற்குழு கூட்ட ஏற்பாட்டில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிறிய மனவருத்தம் ஏற்பட்டிருப்பது போல் சொல்லப்படுகிறது. அதாவது கலைஞர் மறைந்த மறுநாள் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் தி.மு.கவின் செயற்குழு கூட்ட நாள் அறிவிக்கப்பட்டது. செயற்குழு ஆகஸ்ட் 14ந் தேதி கூடும் என்பதை பேராசிரியர் அன்பழகன் தான் தனது அறிக்கை மூலம் தெரிவித்தார். 

ஆனால் தேதியை தன்னுடன் பேசி இறுதி செய்வதற்கு முன்னதாகவே ஸ்டாலின் தரப்பு அறிக்கையை தயார் செய்து கொண்டு வந்து பேராசிரியர் அன்பழகனிடம் கையெழுத்து கேட்டதாக கூறப்படுகிறது. சர்ச்சை வேண்டாம் என்பதற்காக அந்த அறிக்கையில் பேராசிரியர் கையொப்பம் இட்டு செயற்குழு கூட அனுமதி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் கலைஞரை போல் ஸ்டாலின் தன்னிடம் கலந்து பேசி தேதியை இறுதி செய்யவில்லை என்கிற வருத்தம் பேராசிரியருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே செயற்குழு கூட்டத்திற்கு மிகவும் தாமதமாக பேராசிரியர் வந்ததாகவும் பேசப்படுகிறது.

அதாவது பத்து மணிக்கு செயற்குழு என்று அறிவித்ததே பேராசிரியர் அன்பழகன் தான். ஆனால் அன்பழகன் அறிவாலயத்திற்குள் நுழைந்த போது மணி 10.15. அதுமட்டும் இன்றி மேடையில் ஏறி அமர்ந்தது முதல் கீழே இறங்கும் வரை அன்பழகன் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஸ்டாலின் வழிந்து போய் பேசிய போது கூட ஒரே வார்த்தையில் பதில் அளித்து பேராசிரியர் முடித்துக் கொண்டார். துரைமுருகன், டி.ஆர்.பாலு என பலரும் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய நிலையில், அன்பழகன் என்ன பேசப்போகிறார் என்று தான் அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தான் பேச விரும்பவில்லை என்று திட்டவட்டமாக பேராசிரியர் மறுத்துவிட்டார். 

ஸ்டாலின் எவ்வளவோ கேட்டும் இல்லை நான் பேசும் மனநிலையில் இல்லை என்று திட்டவட்டமாக பேராசிரியர் கூறிவிட்டார். இதனால் அடுத்து பேசிய ஸ்டாலின் கலைஞர் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத காரணத்தினால் பேராசிரியர் செயற்குழுவில் பேசவில்லை என்று ஸ்டாலின் சமாளித்தார். ஆனால் தற்போது தி.மு.கவின் தலைவராக இருந்த கலைஞர் மறைந்துவிட்டார். புதிதாக ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று அனைத்து முக்கிய நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் பேராசிரியரும் அனைத்து நிர்வாகிகளின் வலியுறுத்தலையும் வழிமொழியும் வகையில் ஸ்டாலினுக்கு ஆதரவாக சில கருத்துகளை பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முக்கியமான தருணத்தில் பேராசிரியர் பேச மறுத்தது, வெறும் துக்கத்தால் மட்டும் இல்லை என்றே தி.மு.கவினரே கிசுகிசுக்கின்றனர்.  அவரது மன வருத்திற்கு ஸ்டாலின் செயல்பாடு காரணமா? அல்லது வேறு ஏதேனும் எதிர்பார்ப்பில் இருந்து அது நிறைவேறாத காரணத்தால் அவர் அடம்பிடிக்கிறாரா என்று தி.மு.கவில் பட்டிமன்றமே தற்போது நடைபெற்று வருகிறது.