தி.மு.க செயற்குழுவில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தினால் கனிமொழி மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். கலைஞர் மறைவைத் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க அவசர செயற்குழு கூடியது. சுமார் 300 செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல் சுமார் 1000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் அழைக்கப்பட்டிருந்தனர். இதனால் கலைஞர் அரங்கமே நிரம்பி வழிந்தது. 

முதலில் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்தியை பேச அழைத்தார்கள். அவரைத் தொடர்ந்து சேப்பாக்கம் எம்.எல்.ஏ அன்பழகன் பேசினார். பின்னர் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேடை ஏறி பேசினார். தொடர்ந்து டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைமுருகன் ஆகியோர் மேடையில் ஏறி கலைஞர் உடனான தங்கள் நெருக்கத்தை எடுத்துரைத்தனர்.  இறுதியாக ஸ்டாலின் பேசியதும் செயற்குழு நிறைவு பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழிக்கு செயற்குழுவில் பேசி அனுமதி வழங்கப்படவில்லை. தனக்கு பேச அனுமதி இல்லை என்பது முதல் நாளே கனிமொழிக்கு தெரிந்துவிட்டது. ஆனாலும் செயற்குழு துவங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு வரை அங்கு பேச கனிமொழி அனைத்துவிதமான முயற்சிகளையும் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

 நிகழ்ச்சி நிரலை தி.மு.கவின் செய்தி தொடர்புத்துறை செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தான் செய்தார். இளங்கோவன் ஒரு காலத்தில் கனிமொழிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். பின்னர் ஸ்டாலினுக்கு நெருக்கமாகிவிட்டார். இருந்தாலும் இளங்கோவனை தொடர்பு கொண்டு, தனது பெயர் பேச்சாளர்கள் பட்டியலில் இருக்கிறதா என்று கனிமொழி கேட்டுள்ளா. அதற்கு தற்போது வரை உங்கள் பெயர் பேச்சாளர் பட்டியலில் இல்லை என்றே நேற்று இரவு வரை இளங்கோவன் கூறி வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் கனிமொழி ஆ.ராசா மூலமாக செயற்குழுவில் பேசுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளரான ஆ.ராசாவின் பெயரே பேச்சாளர்கள் பட்டியலில் இல்லை. இதனை தொடர்ந்து பேச ஸ்டாலினை தொடர்பு கொண்டு அனுமதி கேட்கலாமா? வேண்டாமா? என்று கனிமொழி யோசித்துக் கொண்டிருந்த போதே செயற்குழு துவங்கிவிட்டது.

பேச்சாளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்றாலும் ஸ்டாலின் தன்னை பேச அழைப்பார் என்றே இறுதி வரை கனிமொழி காத்திருந்தார். ஆனால் கடைசி வரை கனிமொழியை பேச அழைக்கவே இல்லை. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தால் வெளியே செய்தியாளர்களை சந்திக்காமலேயே கனிமொழி புறப்பட்டுச் சென்றார். கலைஞர் மறைவை தொடர்ந்து நடைபெறும் ஒரு செயற்குழு என்பதுமிகவும் முக்கியமானது. அந்த செயற்குழுவில் பேச வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருந்தேன்.  ஆனால் என்னுடைய ஆசை நிறைவேறவில்லை என்று தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் கனிமொழி புலம்பியுள்ளார். மேலும் என் அப்பாவுக்கு என்னால் இரங்கல் தெரிவித்து என் அப்பாவின் பெயர் உள்ள அரங்கில் பேச முடியவில்லை என்றும் வருத்தம் அடைந்துள்ளார். உடன் இருந்தவர்கள் சமாதானத்தை ஏற்று தனது வழக்கமான பணிகளை பின்னர் தொடர்ந்துள்ளார் கனிமொழி.