முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என அமைச்சர்கள் மீது வரிசையாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்து தி.மு.க அ.தி.மு.க அரசை அசைத்துப் பார்த்து வருகிறது. துவக்கத்தில் இந்த விவகாரத்தை அ.தி.மு.க சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தி.மு.கவின் புகார்களை உயர்நீதிமன்றம் சீரியசாக எடுத்துக்கொண்டது.
   
இதனால் அ.தி.மு.க முக்கிய தலைவர்கள் கடந்த  நாட்களுக்கு முன்னர் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசிக்க தொடங்கினர். ஆட்சி அதிகாரத்தில் இல்லாத தி.மு.கவே லஞ்ச ஒழிப்புத்துறையை பயன்படுத்தி நமது கண்களை குத்த ஆரம்பித்துள்ளது. அப்படி இருக்கையில் அதிகாரத்தில் இருக்கும் நாமும் லஞ்ச ஒழிப்பத்துறை பயன்படுத்துவோம் என்று ஒரு முடிவெடுக்கப்பட்டது.


   
அதன் அடிப்படையில் தான் புதிய தலைமைச் செயலக முறைகேடு புகாரை விசாரித்து வந்த ரகுபதி ஆணையத்தை கலைத்துவிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எனவே புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக உள்ள ஐ.ஜி முருகன் தனது நேரடி மேற்பார்வையில் விசாரிக்க முடிவு செய்துள்ளார். 
   
ஸ்டாலின் மட்டும் இன்றி தி.மு.கவின் மாஜி அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அமைச்சர்களாக இருந்த போது அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்களை தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை தூசி தட்ட ஆரம்பித்துள்ளது. இந்த தகவலை வேண்டும் என்றே அதிகாரிகள் வெளியில் கசியவும் வைத்துள்ளனர். விரைவில் தி.மு.க நிர்வாகிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


   
இந்த தகவலை அறிந்த தி.மு.க மாஜிக்கள் மறுபடியும் முதலில் இருந்தா என்று கலங்க ஆரம்பித்துள்ளனர். காரணம் 2011ம் ஆண்டு ஆட்சி மாறியதை தொடர்ந்து கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகனை தவிர தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரை நில மோசடி புகாரில் உள்ளே தள்ளியது அ.தி.மு.க. அதே போன்று தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் பழைய வழக்குகளை தோன்டினால் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல நேரிடுமோ என்பது தான் மாஜிக்களின் கலக்கத்திற்கு காரணம்.