நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையின் பல ஜாம்பவான்களுக்கே முன்னோடியாக இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட ஸீனில், சூழ்நிலையில் ஒரு ஹீரோவானவர் எந்த மாதிரியான ரியாக்‌ஷனை காட்டினால் எடுபடும்? என்பதை கமல்ஹாசனின் படங்களைப் பார்த்து தற்போதுள்ள மாஸ் நடிகர்களும் கூட தங்களை தயார் படுத்திக் கொள்கின்றனர். அந்தளவுக்கு சினிமாவில் பயோனீராக இருக்கிறார். ஆனால் அதே கமல்ஹாசன், அரசியல் விஷயத்தில் பள்ளிக்கூட மக்குப் பையன் போல் திக்கித் திணறி, கொள்கையில் அடிக்கடி பல்டி அடித்து, பல் உடைந்து போவதாக விமர்சனங்கள் வெளுத்தெடுக்கின்றன. கமல்ஹாசனை ஏன் இப்படி திடீரென கொத்து பரோட்டா போடுகிறார்கள் கட்சிக்காரர்கள்?

வேறொன்றுமில்லை, அரசியலுக்கு வந்த கமல் அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும்  ஒரே தட்டில் வைத்துதான் திட்டித் தீர்த்தார். ’ஊழல் பொதி மூட்டை’ என்று காய்ச்சிக் கஞ்சி ஊற்றினார். ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான விஷயங்களில் திடீரென ஸ்டாலினும், கமலும் நெருங்கி வந்தனர். நேற்று சென்னையில் தி.மு.க. நடத்திய மாபெரும் பேரணியில் கலந்துக்க கேட்டு,  ஆர்.எஸ்.பாரதியை கமல் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின். எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையில், தீடீரென அந்த பேரணியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து எஸ்கேப் ஆகி, பல்டியும் அடித்துவிட்டார். இது தி.மு.க. உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் தரப்பை செம்ம டென்ஷனாக்கிவிட்டன. ஸ்டாலினின் கோபத்தை அதிகமாக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமாரும் “ஸ்டாலினின் வலையிலிருந்து தப்பிவிட்டார் கமல்ஹாசன். நல்லது!” என்றெல்லாம் உசுப்பிவிட்டு ஓவர் புண்ணாக்கிவிட்டார் இந்த விவகாரத்தை.

 

இந்த நிலையில் கமல்ஹாசன் ஏன் திடீரென பேக் அடித்துவிட்டார்? என்று தி.மு.க. தரப்பிலிருந்து அலசலுடன் கூடிய விமர்சனம் கிளம்பியுள்ளது. கமலை வெச்சு செய்து கொண்டிருக்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள். அவர்களில் ஒருவரான மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் “கமல் யாருக்கு பயந்து இப்படி பின்வாங்கினார்ன்னு தெரியலை. அவராகவேதான் முன் வந்து தி.மு.க. நடத்தும் பேரணியில் கலந்து கொள்வோம்!  அப்படின்னு சொன்னார். பிறகு பல்டி அடிச்சுட்டார். யாரையோ பார்த்து பயந்து, அவங்க மிரட்டலுக்கு பணிஞ்சுதான் அவர் அரசியலை தத்துப் பித்துன்னு நடத்திட்டு இருக்கிறார். 

அரசியலில் மாறுபாடான கொள்கைகளை வைத்திருக்கும் கட்சிகள் கூட, பொது பிரச்னையில் மக்கள் நலனை முன்வைத்து இணைந்து செயல்படுவாங்க. கேரளாவில் பாருங்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் ஒண்ணா சேர்ந்து நிக்குறாங்க. ஆனால் இங்கே இவரு இப்படி நழுவிட்டு போயிட்டாரு. இப்படி இருந்தால் எப்படி மாற்று அரசியல் உருவாகும்? அவரு மக்களோடு பணியாற்றி, மக்களுக்காக போராடுபவராக இருந்தால் அரசியல் பற்றி அவருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவரோ யாரோ கொடுக்கிற பிரஷருக்காக கட்சி நடத்திட்டு இருக்கிறார். அவர்கிட்ட மக்கள் நல சிந்தனையை எதிர்பார்ப்பது அபத்தமானதுண்ணே!” என்று தாளித்திருக்கிறார். 
ஆனால் மக்கள் நீதி மய்ய தரப்போ ‘இதில் பல்டியும் இல்லை, பக்கோடாவும் இல்லை. கலந்து கொள்ள முடியாத சூழலை சொன்னோம், ஸ்டாலின் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார். அவ்வளவே!’ என்கிறார்கள். நம்புங்கப்பா!