திமுக சார்பில் ஈரோடு மண்டல மாநாடு சற்று முன் தொடங்கியது. திமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கோவி.செழியன் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கனோர் பங்கேற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் திமுக சார்பில் மண்டல மாநாடு  தற்போது நடைபெறுகிறது. திமுக செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் பங்குபெறும் முதல் மாநாடு இது என்பதால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக 1.50 லட்சம் சதுர அடியில் பந்தல், ஒரு லட்சம் நாற்காலிகள், கோட்டை போன்ற முகப்பு தோற்றம், புகைப்படக் கண்காட்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 100 ஜோடிகளுக்கு இலவச சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இன்றும் நாளையும் 2 நாட்களும் திமுக வின் கொள்கைகளை விளக்கும் வண்ணம் இந்த மாநாடு நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று பல்வேறு தலைப்புகளில் திமுக பேச்சாளர்கள் உரையாற்றுகிறார்கள்.

2-ம் நாள் நிகழ்ச்சிகள் நாளை  காலை 9:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கும். காலை 10:00 மணி முதல் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள். 12:30 மணிக்கு திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம் நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மாநாட்டு தீர்மானம் வாசித்தல், மாலை 6:00 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நாளை  இரவு 8:00 மணிக்கு பேசுகிறார். இரவு 8:30 மணிக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். இரு நாட்களிலும் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ரகுமான்கான் என முக்கிய நிர்வாகிகள் பேசுகின்றனர்.

ஈரோடு மண்டல திமுக மாநாடு காரணமாக பெருந்துறை விழாக் கோலம் பூண்டிருக்கிறது. மண்டல மாநாடு என பெயரிடப்பட்டிருந்தாலும் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள்  பங்கேற்றுள்ளனர்.

திமுக மாநாட்டையொட்டி திராவிட இயக்க வரலாற்று கண்காட்சியை இரு நாட்களுக்கு  முன்பு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.