தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் அறிக்கை முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும். எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளன. அந்த வகையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. 

அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மக்களின் அடிப்படைத் தேவைகள், பொருளாதார திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக காண்ட்ராக்ட் முடிந்த பின்பும் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வரும் சுங்கக் கட்டணங்கள் அடியோடு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக மாணவர்களை பாடாய் படுத்தும் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும்.

சாந்தன் , முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும்… வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இணை ஆட்சி மொழியாக கொண்டு வருப்படும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்பன போன்ற பல அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார்.