தேர்தல் வந்தாலே திமுகவுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ்  பயனாளிகளுக்கு மொத்தம், சுமார் 2 கோடி ரூபாய்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில்  அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஐஐடி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். மேலும் காவல்துறை உரிய கடமையைச் செய்து உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆடத்தெரியாதவன் அரங்கு பத்தவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடுவதாக விமர்சித்துள்ளார். 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானதுதான் என கூறிய அவர், நீட் தேர்வு பிரச்சனைக்கு திமுக காங்கிரஸ் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். கடந்த கால மத்திய அரசு ஆட்சியில் அசுர பலத்தில் இருந்த திமுக அப்போது நீட்டை தடுக்காமல் இன்று நாடகமாடி கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.