2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு இரண்டு பேர் வீதம் பொறுப்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். இதற்கான கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் இருக்கும்போது, தேர்தல் பொறுப்பாளர் ஏன்? என்றும் இது அதிமுக பாணியில் இருக்கிறதே? என்றும் கூட்டத்தின்போதே சலசலப்பு ஏற்பட்டது. 

இது குறித்து, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், தலைவர் அவர்களே... நீங்கள் உத்தரவு போடுகிறீர்கள். மாவட்டச் செயலாளர்களாகிய நாங்க அதை செயல்படுத்துறோம். தலைவராக இருக்கும் நீங்க முதல்வராகவும் வரணும்னு கடுமையா உழைக்கிறோம். ஆனா, இந்த பொறுப்பாளர்கள் அப்படி இப்படினு போடுறது எதுக்காகன்னு தெரியலை. நாங்க சரியா செயல்படலையா? மாவட்டச் செயலாளர்களை மீறி பொறுப்பாளர்கள் என்ன செய்யப் போறாங்க? அவங்களோட பொறுப்பும் அதிகாரமும் என்னானு ஒரே குழப்பமா இருக்கு தனது குமுறலைத் தெரிவித்தார்.

 

ஜெ.அன்பழகனின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக திமுக பொருளாளர் துரைமுருகன், ஒவ்வொரு எம்.பி. சீட்டையும் வெற்றி பெறுவதற்காகத்தான் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்காங்க. இதில் அதிகாரம் எங்கேயும் பறிபோகவில்லை. கல்யாணத்துல என்ன நடக்குது? வாழைமரம் கட்டுறது... சமையல் வேலை பாக்குறது... வரவேற்குறதுன்னு ஆயிரம் வேலை இருக்கு. எல்லாத்தையும் மாப்பிள்ளையா பாத்துக்கிட்டிருக்காரு? தாலி கட்ற வேலைதான் மாப்பிள்ளையோடது. 

கல்யாணத்துக்கு ஒத்தாசைக்கு ஆட்களைப் போட்டா மாப்பிள்ளைக கோவப்படலாமா? ஆயிரம் பேர் வந்தாலும் தேர்தலுங்குற கல்யாணத்துக்கு மாவட்டச் செயலாளரான நீங்கதான் மாப்பிள்ளை. பொறுப்பாளர்கள்லாம் உங்களுக்கு ஒத்தாசைக்கு நியமிக்கப்பட்டவங்கதான். அவங்களை சரியா பயன்படுத்திக்கங்க என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலினும், தேர்தல் பொறுப்பாளர்களுடன் மாவட்ட செயலாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருந்து குறிப்பிடத்தக்கது.