வேலூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் காலி குடங்களுடன் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவசர ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி கூறும்போது, இந்த வருடம் மழை குறைவாக பெய்ததால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளுமே வறண்ட நிலையில் இருக்கிறது. இதே காலகட்டத்தில் 2018-ம் ஆண்டு 3 டிம்சி தண்ணீர் இருந்தது. இந்த வருடம் வறண்டு விட்டது. இருந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தேவையான குடிநீரை, அரசு வழங்கி வருகிறது. 

 

மேலும், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக தனியாக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டு உள்ளார். 6 வாரங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். 

இந்நிலையில், சற்றுமுன் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்திக்கையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் சென்னைக்கு எடுத்து சென்றால் வேலூர் மாவட்டம் தழுவி திமுக போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக திமுக எடுத்துரைக்கும் என துரைமுருகன் கூறியுள்ளார்.  தண்ணீர் பிரச்னையை ஆளும் அரசிடம் மக்கள் முறையிடுகிறார்கள். ஆனால். அரசாங்கம் அதனை கடவுளிடம் முறையிடுகிறது. கடவுளிடம் முறையிடுகிறார்கள் என்றால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியவில்லை என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.