திமுகவினர் எடுத்துக்கொடுத்த இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறது என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட பின் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

 

அப்போது இறந்தவர்களின் பெயரால் ஓட்டு விழுவதற்கு யாரோ பின்புலமாக இருக்கிறார்கள் என்பதே அர்த்தம் என்று கூறியுள்ளார். பட்டியலை தயாரிக்கும் அதிகாரிகள் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்காததில் சந்தேகம் நிலவி வருகிறது. 

மேலும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயார், நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை அதிமுக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார். துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்று ஆளுநர் தாமதமாக சொல்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் இப்போது வாய் திறந்ததில் ஏதோ சூட்சமம் உள்ளது. மாநில ஆளுநர் சொல்லி இருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஏதோ ஒன்று நடக்கிறது. அது விரைவில் வெளி வரும் என்றார்.