நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து அடங்கிய நிலையில் அந்த விவகாரம் வெளியானது எப்படி என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

திமுக மட்டும் அல்லாமல் அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் சிறு கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுப்பது நீண்ட காலமாக செயல்முறையில் உள்ள ஒரு விஷயம். இதனை இடதுசாரிக் கட்சிகள் வெளிப்படையாகவே அண்மையில் கூறிவிட்டன. ஜெயலலிதா, கலைஞர் காலம் தொட்டே தேர்தல் செலவுக்கு அந்த இரண்டு கட்சிகளிடமும் பணம் வாங்குவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், இதுநாள் வரை அந்த விவகாரம் வெளியானதே இல்லை. அதே சமயம் தற்போது இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாக தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்த தேர்தல் செலவுக் கணக்கு தான் என்கிறார்கள். மேலும் திமுக கணக்கு தாக்கல் செய்த இரண்டே நாட்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூட இந்த விவகாரம் குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை.

அப்படி இருக்க திடீரென இப்படி திமுகவின் தேர்தல் செலவு கணக்கு விவகாரத்தில் இடதுசாரிகளுக்கு கொடுத்த 25 கோடி ரூபாய் தொடர்புடையை ஆவணம் மட்டும் எப்படி வெளியானது என கேள்வி எழுந்தது. இது குறித்து திமுக தரப்பில் விசாரித்த போது வழக்கம் போல் சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவரை கை காட்டுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக தனது கணக்கில் இருந்து தேர்தல் செலவுக்கு பணத்தை கொடுப்பது அந்த ஆடிட்டர் போன்ற அரசியல் நிபுணர்களுக்கு நன்கு தெரியும் என்கிறார்கள்.

தற்போது மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள அந்த ஆடிட்டர் தனது தொடர்புகளை வைத்து தேர்தல் ஆணையத்தில் இருந்து அந்த ஆவணத்தை கசிய வைத்துள்ளதாகவும் திமுகவினர் கூறுகின்றனர். மேலும் இது முறைப்படி சட்டத்திற்கு உட்பட்டே நிகழ்ந்துள்ளதால் தாங்கள் அதை சீரியசாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி முடித்துக் கொண்டனர் திமுகவினர்.