Asianet News Tamil

’இதே பிழைப்பா போச்சு...’பொதுமக்களுக்கு புரிந்தது திமுகவுக்கு தெரியவில்லை..!

திமுகவில் இருக்கிற பல பிரிவுகளைச் சேர்ந்த தொண்டர்களும் கடந்த சுமார் ஒரு காலமாக தர்மசங்கடத்தில் நெளிகிறார்களே.. வெளிப்படையாக கண்டிக்க முடியாமல் மனதுக்குள் குமைகிறார்களே.. அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது ஏன்..? 

DMK does not know what the public understands - Admk with tamilnadu
Author
Tamil Nadu, First Published Jul 24, 2020, 11:52 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அதிமுகவும் தமிழகமும்- 1. மக்கள் யார் பக்கம்..? 

அதிமுகவின் வெற்றிகளுக்கும் திமுகவின் தோல்விகளுக்கும் காரணம் ஒன்றேதான் - 'திட்டம்!' அதிமுக அரசின் திட்டம் - நேரடியாக, சாமான்யர்களுக்கு நீண்டகாலப் பயன் தரும். திமுக போடுகிற 'திட்டம்' வேறு வகை. 'கணக்கு', சூழ்ச்சி, 'வருமானம்' 'ஓட்டு'. அவ்வளவுதான். அதைத் தாண்டி ஓர் அங்குலம் கூடப் போகாது.சாதி மதம் இனம் மொழி மண்டல அடையாளங்களைத் தாண்டி, எல்லாருக்கும் பொதுவான அரசியல் இயக்கமாக அஇஅதிமுக இயங்கி வருகிறது. சமுதாயத்தின் எந்தப் பிரிவினரையும் புண்படுத்தாத, எல்லாருக்கும் பொதுவான ஓர் அமைப்பு என்கிற சிறப்பு - எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவுக்கு உண்டு. 

என்னதான் அறிக்கைகள் விட்டு விளக்கங்கள் கொடுத்து உரக்க உரக்கக் கூவினாலும், எல்லாரையும் அரவணைத்துச் செல்கிற அனைவருக்கும் பொதுவான கட்சியாகத் திமுக இருந்ததே இல்லை; சாதி மதப் பிரிவினைகளைத் தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காத கட்சிகள் நிறைய உண்டு. அவற்றில் ஒன்றுதான் திமுகவும். 

அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர்., அதற்கு அசுர பலம் பெற்றுத் தந்த ஜெயலலிதா.. இருவருமே, சாதி மத அடிப்படையில் மக்களை, தொண்டர்களைப் பாகுபடுத்திப் பார்த்ததே இல்லை. குறிப்பிட்ட எந்தப் பிரிவினருக்கு எதிராகவும் வெறுப்பு, விரோதம் ஏற்படுத்துகிற எந்தச் செயலையும் மேற்கொண்டதும் இல்லை; ஆதரித்ததும் இல்லை. 

சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக, அவர்களின் முழு ஆதரவு பெற்ற கட்சியாக அதிமுக விளங்குவதன் காரணமே, அக்கட்சியின் பொதுப் பார்வைதான். இந்தக் கண்ணோட்டம், அக்கட்சியின் தனிச்சிறப்பாக இருப்பதனால்தான், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு மிகப் பெரும் ஆளுமைகளின் மறைவுக்குப் பின்னரும், ஒரே ஒரு தொண்டன் கூட அதிமுகவை விட்டு வெளியேறவில்லை.

சமீபத்தில், கந்த சஷ்டி கவசம் துதிப்பாடலுக்கு எதிராக காணொலிக் காட்சி பதிவேற்றப் பட்டதும், அதற்கு எதிராக பலமான கண்டனங்கள் தொடர்ந்து பரவலாகி வருவதும் நாம் பார்க்கிறோம். தமிழ்க் கடவுள் முருகன் மீதான அர்த்தமற்ற தாக்குதல் மற்றும் அநாகரிகமான பேச்சு, திமுகவின் ஆதரவுடன் நடந்த, திட்டமிட்ட வக்கிரமான பிரசாரம் என்று, மக்கள் திடமாக நம்புகிறார்கள். 

எல்லா மட்டங்களிலும் இந்தக் கருத்து ஆழமாகப் பதிந்து விட்டது. என்ன காரணம்..? எந்த ஊரிலும் யாரும் அதிமுகவை குற்றம் சாட்டவில்லையே... அது ஏன்..? 
இது தொடர்பாக, யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம்.  'இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு.. ஆபாசமாப் பேசறதே தொழிலா வச்சிக்கிட்டு இருக்காங்க..' என்கிற வாதம், அடிமட்டத்தில் உள்ள சாமான்யனின் வீடுகளில் கூடக் கேட்கிறதே... அது ஏன்..? 'ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையை மூட்டி விட்டு அதனால ஆதாயம் தேடப் பார்க்கறாங்க..' என்று திமுகவுக்கு எதிராகத் தொடர்ந்து சொல்லப் பட்டு வருகிறதே... அது ஏன்..? 

திமுகவில் இருக்கிற பல பிரிவுகளைச் சேர்ந்த தொண்டர்களும் கடந்த சுமார் ஒரு காலமாக தர்மசங்கடத்தில் நெளிகிறார்களே.. வெளிப்படையாக கண்டிக்க முடியாமல் மனதுக்குள் குமைகிறார்களே.. அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது ஏன்..? தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினப் பெருமக்கள் திமுகவின் எதிர்மறைப் பிரசாரத்தை எண்ணி, மனம் வருந்துகிறார்களே.... அது ஏன்..?

 

எல்லாருக்கும் பொதுவான அரசியல் அமைப்பாக இருந்து, அப்படியே செயல்பட்டால்தான் சமுதாயத்தில் அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கும்; அதுதான் என்றைக்கும் உதவும். அதிமுகவில் இந்தப் பொதுக் குணம் இயல்பாகவே அமைந்து விட்டது. திமுகவில் அது அடியோடு புதைக்கப்பட்டு விட்டது. திமுகவின் எதிர்மறை அரசியல், நடுநிலையுடன் சிந்திக்கிற, சமுதாய நலன் விரும்புகிற, திமுக ஆதரவாளர்களை முகம் சுளிக்க வைத்து விட்டது. சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த பல பெரியவர்கள், அறிவார்ந்த இளைஞர்கள், திமுகவின் வெறுப்பு அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறார்கள். சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.

வெளிப்படையாகத் திமுகவுக்கு எதிரான பதிவுகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகின்றன. எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் எல்லா சமயத்தைச் சேர்ந்தவர்களும் அதில் இருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால், இது மிகவும் அபூர்வ நிகழ்வாகத் தெரிகிறது. உண்மையில் அப்படி இல்லை. ஒரு பிரிவினரை நிந்தித்தால் பிற பிரிவினர் மகிழ்வார்கள் என்கிற கணக்கு என்றுமே சரியாக இருக்க முடியாது. இது, மக்களுக்குப் புரிந்து இருக்கிறது; திமுகவுக்குத் தெரியவில்லை. 'நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை; எங்கள் கட்சியிலும் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள்..' என்றெல்லாம் அறிக்கை விடுகிறார்கள். இதற்கு பதிலாக, 'இதனைத் திமுக வன்மையாகக் கண்டிக்கிறது' என்று கூறியிருந்தால், ஏற்புடையதாக இருந்து இருக்கும். சொல்லவில்லையே..! 

'திமுகவுக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது..' என்று புலம்புவது எல்லாம் வெற்று நாடகம். எந்தப் பயனும் விளையப் போவது இல்லை. யாரும் ஏமாறப் போவதும் இல்லை. தேர்தல் வெற்றியும், ஆட்சியைப் பிடித்தலும், திமுக போன்ற கட்சிக்குப் பெரிய சவாலே இல்லை. அதிமுக - திமுக ஆகிய இரண்டு கட்சிகள்தாம் போட்டிக் களத்தில் உள்ளன. அப்படி இருக்க, ஒரு சாராரின் இறை நம்பிக்கையைக் குறி வைத்துத் தாக்குவதால், அதிமுகவின் வாக்குகளை பெற்று விட முடியும் என்று திமுக எப்படி நம்புகிறது..? இந்த 'திட்டம்' எந்த வகையில் திமுகவுக்குத் தேர்தலின் போது கைகொடுக்கும்..? 

தவறான ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது திமுகழகம். இதனால் தனது எதிர்காலத்தைத் தானே சிதைத்துக் கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த 'முன்னேற்றம்' காரணமாக, அதிமுகவுக்கு எதிராக வலுவான 'பொதுவான' கட்சி இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. நடுநிலையாளர்கள், இளம் வாக்காளர்கள், தீர்மானிக்காதவர்கள் (undecided voters)என்று ஒரு மிகப் பெரிய வாக்கு வங்கி, ஒட்டு மொத்தமாக, அதிமுகவின் பக்கம் திரும்பி விட்டதாகத் தோன்றுகிறது. உண்மையில் இது, அதிமுகவே கூட எதிர்பார்த்து இராத, 'திடீர் ஜாக்பாட்'. 

இந்தப் புள்ளியில் இருந்து இனிமேல், அதிமுக கவனமாக அடியெடுத்து வைத்தால்,  2021 பொதுத் தேர்தல், அதிமுகவின் வெற்றிக் களமாக அமைய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. மூன்று பகுதிகளாகத் தனது பிரசாரத்தை அதிமுக அமைத்துக் கொள்ளலாம். 1. எம்.ஜி.ஆர். ஆற்றிய நற்பணிகள்; 2. ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்கள்; 3. 'ஜெ'வுக்குப் பிந்தைய அரசின் நடவடிக்கைகள். இவை குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். என்ன செய்து விட்டார் எம்.ஜி.ஆர்.? 

(வளரும்...

 

அதிமுகவும் தமிழகமும் என்கிற தொடரை வருமான வரித்துறை ஓய்வு பெற்ற அதிகாரியும், எழுத்தாளுருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதுகிறார். பல்வேறு நாளிதழ், வார இதழ், இணைய தளங்களில் நாட்டு நடப்பு, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு போன்ற பிரிவுகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios