திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என பழனி தொகுதி எம்.எல்.ஏ.வும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐபி செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது  ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார்;

அதில்;  ஜூன் மாதம் பிறந்துவிட்டது. இது வழக்கமான ஜூன் மாதம் அல்ல. என்னை பொறுத்த வரை ஜூன் மாதத்திற்கு ஒரே ஒரு தேதிதான் அது மூன்றாம் தேதி. தானைத்தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள். மாதம் முழுவதுமான கொண்டாட்டம், கொடியேற்றம், பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் என்று ஜூன் மாதத்தின் ஒவ்வொரு நாளும் மூன்றாம் தேதியாகத்தான் இருக்கும். ஆனால் இதுவரை நாம் கொண்டாடிக்கழித்த ஜூன் இது அல்ல, இது வேறு ஒரு ஜூன்.

நம் தலைவர் நம்முடன் இல்லாத முதல் ஜூன் 3 இது. அவர் இல்லை என்கிற நினைவே மனதை பிசைகிறது. ஆனால் தலைவர் கற்றுத்தந்த பாதையில், விரல் நீட்டிய திசையில், அவர் கொடுத்துள்ள அருட்கொடையாம் தலைவர் தளபதியின் சீரிய பாதையில், சரியாகவே பயணிக்கிறோம் என்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவித்துள்ளது. எங்களது இந்தியா தெற்கிலிருந்து தொடங்கிறது என்பதை உலகுக்கு சொல்லுகிறது நாம் வென்றுள்ள இடங்கள்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செயலை எங்கள் மாவட்ட கழகத்தின் சார்பில் செய்திருக்கிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் சுற்றிச்சுழன்ற சூறாவளியாய் தமிழகமெங்கும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். மக்கள் மொழியில் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை பெற்றுத்தந்தது. அவரின் பிரச்சாரமும்,பழகும் பண்பும் கழகத்தினர் மத்தியில் புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. இப்படியான சூழலில் கழகத்தலைவர் மாண்புமிகு.தளபதியார் அவர்கள் எப்படி இளைஞரணியை பொறுப்பேற்று கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றாரோ,அதைப் போல அண்ணன் உதயநிதி அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணியின் தலைமைப் பொறுப்பினை மாண்புமிகு கழகத்தலைவரின் அனுமதியோடு ஏற்க வேண்டும் என்று, திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.

அண்ணாவின் அன்பகத்திலிருந்து அண்ணன் உதயநிதி அடுத்த தலைமுறை இளைஞர்களுக்காக திமுகவினை கொண்டு செல்லும் பணியை விரைவில் துவக்கவேண்டும் என்பதே, இந்த ஜூன் மூன்றில் வரலாற்று நாயகர் முத்தமிழறிஞர் தலைவர்.கலைஞரின் நினைவிடத்தில் நான் வைக்கப்போகும் கோரிக்கையாகும்.

வாழ்க வாழ்க வாழ்கவே - டாக்டர் கலைஞர் புகழ் வாழ்கவே. வெல்க...வெல்க...வெல்கவே தங்கத்தலைவர் தளபதியார் வெல்கவே...👍👍👍 என தனது பதிவில் அழுத்தமாக கூறியுள்ளார்.

தமிழைகாத்த தலைவர் கலைஞரின் வழியில் , தமிழகத்தின் தன்மானத்தை காத்த தளபதியாரின் செயலில், புதிய புரட்சியை உருவாக்க இளைஞர்களின் எழுச்சியே இளைஞர்களின் தலைவராக  வருக! வருக!! என உதயநிதிக்கு ஆதரவாக கமாண்ட்ஸ் பதிவாகி வருகிறது.