மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

கடந்த, 2006-ம் ஆண்டு ம.தி.மு.க.வை உடைக்க, முயற்சி செய்கிறார்' என, மறைந்த கருணாநிதிக்கு எதிராக, அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, வைகோ கடிதம் எழுதினார். இக்கடிதத்தின் அடிப்படையில், தி.மு.க. அரசு சார்பில் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, கருணாநிதி முன் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் மற்றும் வைகோ தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், வைகோவுக்கு எதிரான அவதூறு வழக்கின் தீர்ப்பை வரும் 30-ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.