அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  சேலம் வந்த, முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது மேகதாது அணை கட்டக்கூடாது என்பது, தமிழக அரசின் நிலைப்பாடு என குறிப்பிட்ட அவர் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தண்ணீர் இருப்பு இருந்தும், தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் வழங்கவில்லை என குற்றச்சாட்டினார்.

பாலாறு அணையில்  ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவது குறித்து  சட்ட ரீதியாக சந்திப்போம் என எடப்பாடி தெரிவித்தார்.. அமைச்சர்கள் மீது, புகார் எழுந்துள்ளதால் அவர்களை , குற்றவாளியாக கருத முடியாது என்றார்.

மக்களிடையே, அ.தி.மு.க., செல்வாக்கு அதிகரிப்பதால், வேண்டுமென்றே திட்டமிட்டு, தடை செய்ய முயற்சிக்கின்றனர். அது முடியாததால், இப்படி குற்றச்சாட்டை எழுப்புகின்றனர் என கூறினார்.

தமிழகத்தில் எந்த துறையிலும், தவறு நடந்துள்ளதாக புகார் வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில், குற்றச்சாட்டு தெரிவித்ததும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தமிக அரசை பொறுத்தவரை, சிறப்பாக செயல்படுகிறது என எடப்பாடி கூறினார்.

கடந்த கால, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இனி, அவை வெளியே வரும் என்ற அவர் தேர்தலின்போது, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

பெட்ரோல் விலையில், மதிப்பு கூட்டு வரியை, மத்திய அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில், நிதி பற்றாக்குறையாக உள்ளது. ஒவ்வொரு துறையிலும், நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய சூழல் உள்ளது என்றார்.

சி.பி.ஐ., ரெய்டுக்கு, மத்திய அரசே காரணம் என கூறியது, தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து அது அரசின் கருத்து இல்லை என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு, மத்திய அரசோடு இணக்கமான சூழலில் உள்ளது என தெரிவித்தார்.