திமுக பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாக பேசிவருவதை கண்டித்து திங்களன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. 

மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி 14ம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என பேசினார். இப்பேச்சு கடும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. அவரின் இந்த பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், தலைமைச் செயலாளர் சண்முகத்தை குறை கூறுவதாக நினைத்து நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசி விட்டு அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இவர்கள் வரிசையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் அம்பட்டயன் என்ற மோசமான வார்த்தைகள் குறிப்பிட்ட திமுக எம்.எல்.ஏ., பி.டி.ஆர். தியாகராஜன் கூறினார். மேலும், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் குற்றச்சாட்டை மொத்தமாக சொல்வது மூட்டை கட்டி வண்ணானுக்கு அழுக்கு துணி போடுவது கதையாக இருக்கிறது என்று கூறியதாக சர்ச்சை கிளம்பியிருந்தார். ஆனால், இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். 

இந்நிலையில், எதிர்கட்சியான திமுகவை எதிர்த்து ஆளுங்கட்சியான அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. அதில், தமிழகத்தில் உயர் பதிவில் இருக்கக்கூடிய பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாக பேசிவரக்கூடிய திமுக நிர்வாகிகளை கண்டித்தும், தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு திமுகவினரின் தரக்குறைவான பேச்சுகளை கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் இந்த போராட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து மாவட்டங்களிலும், காலை 10.30 மணி முதல் 11 மணிவரை தங்களுடைய மாவட்டங்களில் நடைபெறக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என ஒரு அறிவுத்தலையும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் அதிக மக்கள் கூடும் அளவு அல்லது மாவட்டத்திற்கு 4 அல்லது 5 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் அதிமுக தலைமை வழங்கியுள்ளது.