தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையிலேயே தி.மு.க – காங்கிரஸ் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளது தி.மு.க. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 25 தொகுதிகளில் போட்டி என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அந்த 25 தொகுதிகளையும் கூட தீர்மானித்து வேட்பாளர் தேர்வில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். அதற்கு முன்னதாக கூட்டணியில் உள்ள தலைவர்களை கடந்த வாரங்களில் அழைத்து யாருக்கு எத்தனை தொகுதி என்பதை வெளிப்படையாகவே ஸ்டாலின் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. 

ஸ்டாலின் கூறிய எண்ணிக்கை காங்கிரஸ் தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை யாருக்கும் திருப்தியை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் கூட 25 தொகுதிகளில் போட்டி என்கிற நிலைப்பாட்டில் இருந்து இறங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தி.மு.க வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றனர். அதிலும் காங்கிரஸ் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதிகள் என்கிற எண்ணத்துடன் ஸ்டாலினை அணுகியது. 

ஆனால் மொத்தமே ஒன்பதுக்கும் குறைவான தொகுதிகள் தான் காங்கிரசுக்கு என்று திருநாவுக்கரசரிடம் ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரசுக்கு வாக்கு வங்கி குறைந்துவிட்டதாகவும் தி.மு.க தரப்பு எடுத்துரைத்துள்ளது. இந்த தகவல்களை உடனடியாக திரநாவுக்கரசர் டெல்லிக்கு பாஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருநாவுக்கரசரை உடனடியாக டெல்லி வருமாறு அழைப்பு வந்துள்ளது. இதனை ஏற்று அவரும் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். 

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எப்போதும் நிதானத்தை கடைபிடிக்கும் தி.மு.க தற்போது அதிரடி காட்டி வருவது காங்கிரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கடந்த புதனன்று நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பதை பற்றியெல்லாம் பேசினோம் என்று ஸ்டாலின் வெளிப்படையாக கூறியது அந்த கட்சி செய்யும் அரசியலில் புதியது என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

எனவே தி.மு.கவிடம் இருந்து 10 தொகுதிகளை பெறுவது என்பது முடியாத காரியம் என்று சத்தியமூர்த்தி பவனில் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து பேசவே திருநாவுக்கரசர் டெல்லிக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.