தமிழக அரசு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதை நிறுத்த தடைவிதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு உதவித்தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அந்தத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்தத் தொகை அனைவரது வங்கிக் கணக்கில் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்திடமும், தமிழக அரசு தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை ஆளையருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ’’ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வாக்குக்காக ரூ.2000 தரப்படுவதாக அதிமுக நிர்வாகி வைகைச்செல்வன் பேசியுள்ளார். பணம் பெறும் 2 கோடி பேர் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். முதல்வர் எடப்பாடியால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு நிதி தேர்தல் ஆதாயம் பெறுவதற்கே. வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு என்று கூறி அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளது.


 
சிறப்பு நிதி விண்ணப்பப் படிவத்தை அதிமுக நிர்வாகிகள் மூலம் தருவதை தடுக்க வேண்டும். தேர்தல் ஆதாயத்துக்காக அரசு அதிகாரத்தை அதிமுக தவறாக பயன்படுத்துகிறது. இந்த சிறப்பு நிதி திட்டத்தை தடுக்க வேண்டும். தேர்தல் ஆதாயத்திற்காக அரசு அதிகாரத்தை அதிமுக தவறாக பயன்படுத்துகிறது. வாக்கை பெறுவதற்காக அறிவித்துள்ள திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஏழைக் குடும்பங்களுக்கு 2000 பணம் வழங்கும் திட்டத்திற்கு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.