விக்கிரவாண்டி தொகுதியில் திமுக இறங்குமுகமாக இருந்த போதே பொன்முடியை தொலைபேசியில் அழைத்துள்ளார் ஸ்டாலின். அப்போது பேசிய பொன்முடி, அடுத்தடுத்த சுற்றுகளில் நமக்கு சாதகமாக வரும் என்று பதில் அளித்துள்ளார். இதனால் ஸ்டாலினும் ஒரு கட்டத்தில் நம்பிக்கையுடன் தான் இருந்துள்ளார். ஆனால் வாக்குவித்தியாசம் 10 ஆயிரத்தை தாண்டியதும் ஸ்டாலின் எழுந்து சென்றுள்ளார்.

பிறகு தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியான பிறகு விக்கிரவாண்டியில் வாக்கு வித்தியாசம் 40 ஆயிரத்திற்கும் அதிகம் என்று கூறியதை கேட்ட ஸ்டாலின் மிகவும் கோபப்பட்டுள்ளார். முதலில் அவர் வேட்பாளர் புகழேந்தியை தான் அழைத்துள்ளார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய புகழேந்தி சில தகவல்களை கூறியுள்ளார். அதனை கேட்டு ஸ்டாலின் மிகவும் டென்சன் ஆனதாக சொல்கிறார்கள்.

உடனடியாக பொன்முடியை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு ஸ்டாலின் அடுத்த வேலையை பார்க்கச் சென்றுள்ளார். இதனிடையே தேர்தல்முடிவுகள் வெளியான மறுநாள் காலை 10 மணி அளவில் பொன்முடி வேட்பாளர் புகழேந்தியுடன் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு சென்றதாக கூறுகிறார்கள்.

பொன்முடி வந்த தகவல் உடனடியாக ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டுள்ளது. இதனை கேட்ட ஸ்டாலின் அவரை அறிவாலயம் செல்லச் சொல்லுங்கள் அங்கு நான் வருகிறேன் என்று கூறியதாக பேசிக் கொள்கிறார்கள். இந்த தகவலை ஸ்டாலினின் வலதுகரமாக இருககும் எம்எல்ஏ ஒருவர் பொன்முடியுடன் கூற ஒரு கனம் அவர் ஆடிப்போயுள்ளார். ஏனென்றால் ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து உள்ளே செல்லாமல் திரும்பிச் செல்வதாக என்று அவர் நிலைகுலைந்ததாக சொல்கிறார்கள். இதனை அடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற பொன்முடி மற்றும் புகழேந்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கு காத்திருந்ததாக சொல்கிறார்கள். இதன் பிறகு வந்த ஸ்டாலின், விக்கிரவாண்டியில் ஏற்பட்டிருப்பதுதோல்வி அல்ல அவமானம் என்று சீறியதாகவும் அதற்கு எல்லாம் பணம் தான் என்று பொன்முடி பதில் அளித்ததாகவும் சொல்கிறார்கள். அப்படி என்றால் நம்மிடம் அது இல்லையா என்று ஒரே கேள்வி மூலம் பதில் அளித்துவிட்டு பொன்முடியை அனுப்பிவிட்டதாக கூறுகிறார்கள்.

இதன் பிறகு புகழேந்தியிடம் ஸ்டாலின் தனியாக பேசியதாகவும், அப்போது தேர்தல் பணியில் நடைபெற்ற சில தில்லுமுள்ளுகளை அவர் பட்டியலிட்டதாகவும் சொல்கிறார்கள். இதனை குறித்து வைத்துக் கொண்ட ஸ்டாலின் விக்கிரவாண்டி தோல்விக்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று விழுப்புரம் மாவட்ட திமுகவினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.