திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 3 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் இரண்டாவது நாளாக இன்று பாளையங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி ஆகிய ஊர்களில் தனது திண்ணை பிரச்சாரத்தை தொடங்கினார். எடப்பாடி அரசு எடுபிடி அரசாக செயல்படுகிறது என அவர் குற்றம் சாட்டினார். அப்போது அவர் கிராம மக்களிடம் அந்தந்த ஊர்களில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது... வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நல்ல பாடத்தை மத்திய மாநில அரசுகளுக்கு புகட்ட வேண்டும் . 8 வருடமாக தங்களது ஆட்சியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள கோடி கோடியாக அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கு வழங்குவதற்காக கமிஷன் மற்றும் ஊழல் செய்து வருகின்றனர்.

 

மக்கள் பிரச்சினை பற்றி சிந்திப்பதில்லை. இந்தப் பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ரேஷன் கடை பிரச்சனை மருத்துவமனை பிரச்சனை சாலை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு குறைகளை எடுத்துரைத்தனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாது தான். திமுகவும் உயர் நீதிமன்றம் வரை சென்று நீதி கேட்டது. நீதிமன்றமும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேதியும் மாதமும் குறித்து ஆணை பிறப்பித்தது .ஆனால் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடந்து விட்டாலே மக்களின் 90 சதவீதமான பிரச்சனைகள் தீர்ந்துவிடும். கடந்த ஐந்து முறை திமுக ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியது. சொத்தில் சமபங்கு உரிமை, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை... என பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தது .விவசாயிகளின் நலனுக்காக சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை ரத்து செய்தது. இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கியது,. 

பெண்களுக்கு சுய உதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் வங்கிக் கடனுதவி, மானியத்துடன் கடனுதவி ,சுழல் நிதி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது .ஆனால் இந்த திட்டத்தை இந்த அரசு சிதைத்துவிட்டது .திமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களை நேரடியாக சந்தித்து வரும். கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வாக்களித்தது போல நாடாளுமன்றத்தில் நீங்கள் வாக்களித்தது போல இந்த இடைத்தேர்தலிலும் நீங்கள் வாக்களிக்க வேண்டும் .மத்திய மாநில அரசுகளுக்கு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும். வாக்கு கேட்டு வருவதோடு நாங்கள் நின்றுவிடாமல் நன்றி கூறவும் வருவோம் உங்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க எப்பொழுதும் தயாராக இருப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.