திமுக ஆட்சிக்கு வந்த கையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்கள்  சிறைக்குப் போவது உறுதி என  திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக பேசியுள்ளார். 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற  இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை, தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தப் பிரச்சாரத்தில் திமுகவும் அதிமுகவும் ஒருவரை மாற்றி ஒருவர் என கடுமையாக விமர்சித்து  வருகின்றனர்.  இந்த நிலையம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின்,  பேரூர்,  முனைஞ்சிப்பட்டி,  இட்டமொழி,  உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு பதிலாக மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார், அதற்கு  எடுபிடி வேலை செய்யும் கையாளாகவே அதிமுக அரசு உள்ளது என்றார். 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், அப்படி மாற்றம் வந்தவுடன்,  ஊழலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பழனிச்சாமியின் உறவினர்களும்  சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்களும் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தற்போது அதிமுக அமைச்சர்கள்  செய்யும் அனைத்து தவறுகளுக்கும் திமுக ஆட்சியில் தண்டனை நிச்சயம் கொடுக்கப்படும் என்றார். அத்துடன்,  தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஒரு ராணுவ வீரர் என்று கூறிய ஸ்டாலின்,  நாட்டை  காப்பாற்றியது போல தொகுதியையும் காப்பாற்றுவார் என பேசினார்.