உள்ளாட்சி தொடர்பான ஒப்பந்தங்களில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், திமுக தொடரும் வழக்குகளை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு அரசு கான்ட்ராக்ட் பணிகள் எஸ்.பி.வேலுமணி கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.  

எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் - நண்பர்கள் நிர்வகிக்கும் கேசிபி இன்ஜினியர்ஸ், வர்தன் இன்ஃபராஸ்ட்ரக்சர், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் பணிகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரின் சகோதரர் பி.அன்பரசனின் பி செந்தில் அன் கோ நிறுவனத்துக்கு ரூ. 80 கோடி மதிப்பில் அரசு கான்ட்ராக்டுகள் வழங்கப்பட்டுளதாக புகார் எழுந்துள்ளது. 

இதேபோல் அமைச்சரின் நெருங்கிய நண்பர் ரஞ்சன் சந்திரசேகரின் கேசிபி இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளிட்டவைகளுக்க பல லட்சம் மதிப்புடைய அரசு காண்ட்ராக்டர் பணிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்.பி.வேலுமணி, இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்றும், தன்னை அவமானப்படுத்தும் வகையிலும், மக்களிடம் தன் அபிமானத்தை சிதைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட பொய்யான செய்திகள் என்று அண்மையில் கூறியிருந்தார். 

இது தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி அன்று திமுக சார்பில் 3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, உள்ளாட்சி தொடர்பான எந்த ஒப்பந்தத்தலும் முறைகேடு நடைபெறவில்லை என்றும் திமுக தொடரும் வழக்குகளை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் கூறினார்.