அழகிரிக்கு என தொண்டர்களிடம் இருக்கும் மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என திமுக தொண்டர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில்,

அன்புள்ள அழகிரி 

கழகத்தை நேசிக்கும் அன்புத் தொண்டன் எழுதுவது.

அன்பிற்குரிய கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது. நீங்கள் தலைவரின் சமாதிக்கு சென்றது குறித்தும் அஞ்சலி செலுத்தியது குறித்தும் மிக்க நெகிழ்ச்சி. ஆனால் கலைஞரின் விசுவாசிகள் உங்கள் பக்கமாக இருப்பதாகப் பேசியிருக்கிறீர்கள். எதிரிகளுக்கு தீனி போடுகிறீர்கள். நாளை எதிரிகளின் ஊடகங்கள் எதைத் தலைப்புச் செய்தியாக்குவார்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையான கள நிலவரம் என்ன என்பது உங்களுக்கே தெரியாதா என்ன?

வெண்ணை திரண்டு வருகிறது. தாழியை உடைக்க முயற்சிக்காதீர்கள். எதிரிகளின் கைகளில் பகடையாகதீர்கள்.

அழகிரி என்றால் தலைவரின் மகன் என்ற அன்பு எங்களுக்கு உண்டு. பாஜகவின் பச்சோந்தி தனத்துக்கு ஏமாந்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தீபாவை, திவாகரனை காமெடியன்களாக பார்ப்பதில் எந்தச் சங்கடமுமில்லை. ஆனால் அழகிரியை அப்படி பார்த்துவிடக் கூடாது என்று மனம் தவிக்கிறது. இப்பொழுது நீங்கள் பேசுவது வெறும் சலனத்துக்குப் பிறகு எதுவுமில்லாமல் போய்விடும். 

திமுகவுக்கு பாதிப்பு என்றால் யாரையும் தூக்கி வீசிவிடத் தயங்காதவன் திமுகக்காரன் என்று நீங்கள் அறியாததா? உண்மையிலேயே பதைபதைக்கிறது.உங்களை உசுப்பேற்றும் கூட்டம் உங்களை கறிவேப்பிலையாக தூக்கி வீசிவிடுவார்கள். தலைவரின் பிள்ளை அப்படி தவிப்பதை பார்க்க மனம் எப்படி ஒப்பும்? அழகிரிக்கு என தொண்டர்களிடம் இருக்கும் மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

வெளியில் பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இரையாகிவிடாதீர்கள்.

இப்படிக்கு,
தலைவரின் அன்புத் தொண்டன் இவ்வாறு அழகிரிக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.