வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 

தமிழகத்தில் வேலூர் உள்பட 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இத்தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த், அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருந்த நிலையில், இத்தொகுதியில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, திமுக ஆதரவாளர்களிடம் வீடு மற்றும் குடோனில் 13 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

 

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 18, வேட்புமனு பரிசீலனை ஜூலை 19, வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 22, வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும். ஆகஸ்ட் 9-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  

வேலூர் மகக்ளவை தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏ.சி.சண்முகம் மற்றும் தீபலட்சுமி ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்நிலையில், துரைமுருகன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மனுத்தாக்கல் செய்தார். கதிர் ஆனந்துக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சங்கீதாவும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த முறை கதிர்ஆனந்த் மனுதாக்கல் செய்தபோது அவரது மனைவி சங்கீதா மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.