Asianet News TamilAsianet News Tamil

திமுகவில் அதிருப்தியாளர்களை அலேக்காக தூக்க பாஜக ஸ்கெட்ச்..? முதல் இழுப்பில் சிக்கிய வி.பி.துரைசாமி!

வட மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அலேக்காக தங்கள் கட்சிக்கு தூக்கும் உத்தியை பாஜக கடந்த சில ஆண்டுகளாகக் கச்சிதமாக அரங்கேற்றிவருகிறது. தற்போது அதே பாணியில் தமிழகத்திலும் குறிப்பாக திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை மெல்ல தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளை தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

DMK - BJP Political fight and sketch for dmk leaders
Author
Chennai, First Published May 22, 2020, 11:28 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

வட மாநிலங்களில் அதிருப்தியில் உள்ளவர்களை வளைப்பதுபோல தமிழகத்தில் திமுகவில் அதிருப்தியில் இருப்போரை வளைக்கும் பணியை பாஜக தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவில் இப்போதைய ஹாட் டாபிக் வி.பி.துரைசாமிதான். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்த பிறகு, திமுக தலைமை ஆடிப்போனது. முரசொலி விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் வரையிலும்; தற்போது தயாநிதி மாறன் விவகாரத்தில் பாஜக எஸ்.சி. அணி சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதிலும் தற்போதைய பாஜக தலைவர் எல்.முருகனின் பங்களிப்பு அதிகம். இதுபோன்ற சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி பாஜக தலைவரை சந்தித்தது திமுகவில் கோப அலைகளை ஏற்படுத்தியது.


ஏற்கனவே ராஜ்ய சபா எம்.பி. பதவி கிடைக்காத விரக்தியில் வி.பி.துரைசாமி இருந்தது திமுக தலைமைக்கு தெரியும் என்றாலும், இந்தச் சந்திப்பு குறித்து வி.பி.துரைசாமி எதுவும் பேசாததால் இரண்டு நாட்கள் கட்சி தலைமை அமைதியானது. ஆனால், “மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் நல்லவர்; கூட்டு பொறுப்பாக அவர் மோசம்; கட்சியின் நல்ல, கெட்ட முடிவுகள் எல்லாமே வீட்டில்தான் எடுக்கப்படுகிறது; வயது வித்தியாசம் பார்க்காமல் எம்.பி. பதவிக்காக உதயநிதியைச் சந்தித்து கெஞ்சினேன்” என்று வி.பி.துரைசாமி ஊடகத்துக்கு அளித்தப் பேட்டி மு.க. ஸ்டாலினை சூடாக்கியது.


இதனையடுத்து நேற்றைய  தினமே, வி.பி.துரைசாமியின் கட்சிப் பதவியைப் பறித்தார் ஸ்டாலின். மேலும் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, உறுப்பினர் பதவியைப் பறிக்கவும் கட்சி மேலிடம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் திமுகவிலிருந்து நானே விலகிவிட்டேன் என்று வி.பி.துரைசாமி கூறி, பாஜகவில் இணையப்போவதாகவும் அறிவித்தார். அதன்படி இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள கமலாயத்தில் கட்சித் தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.

 
இந்நிலையில் வி.பி.துரைசாமியைப் போலவே, திமுகவில் அதிருப்தியில் இருப்போர், கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கி இருப்போர் போன்றோரை வளைக்கவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் முனைப்பாக உள்ளது. அதற்கேற்ப திமுகவுக்கு எதிராக பல காய்களை பாஜக நகர்த்திவருவதாகவும் கூறப்படுகிறது. அதில், அதிருப்தி திமுக நிர்வாகிகளை வளைப்பதும் ஒன்று. அதில் முதல் ஆளாக முக்கிய பொறுப்பில் இருந்த வி.பி.துரைசமி சிக்கியதாகக் கூறப்படுகிறது.
ராஜ்ய சபா தேர்தலில் வி.பி.துரைசாமிக்கு சீட்டு மறுக்கப்பட்டதும், மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமான முக்கிய எம்.எல்.ஏ.வை அனுப்பி வி.பி.துரைசாமியை சாமாதானம் செய்ததாகவும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் தொகுதி ஒதுக்குவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ஸ்டாலின் சார்பில் வி.பி.துரைசாமியிடம் உறுதியளிக்கப்பட்டதாகவும் திமுகவில் பேசப்படுகிறது. இத்தனை உறுதியளிப்புக்குப் பிறகும் வி.பி.துரைசாமி, பாஜக பக்கம் சாய்ந்தது திமுகவுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தவும் தவறவில்லை.

 
வட மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அலேக்காக தங்கள் கட்சிக்கு தூக்கும் உத்தியை பாஜக கடந்த சில ஆண்டுகளாகக் கச்சிதமாக அரங்கேற்றிவருகிறது. தற்போது அதே பாணியில் தமிழகத்திலும் குறிப்பாக திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை மெல்ல தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளை தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேறுமோ?! 

Follow Us:
Download App:
  • android
  • ios