கொங்கு மண்டலத்தில் போட்டியிட திமுக பம்முகிறதா..? வயிற்றில் புளியைக் கரைக்கும் புள்ளிவிவரங்கள்!
கொங்கு மண்டலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை திமுக விட்டுக்கொடுத்திருப்பதன் மூலம் அந்த மண்டலத்தில் போட்டியிட திமுக ஏன் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அதிமுக பலமான கட்சியாக விளங்கிவருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு கொங்கு மண்டலம்தான் காரணமாக இருந்தது. ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தின் பல்ஸ் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக இருப்பதால், ஏற்கனவே இருந்ததுபோல அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் ஆதரவு இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் சேலம், நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 5 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக விட்டுக்கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 தொகுதிகளில் திமுக மூன்றாவது இடத்துக்கு பரிதாபமாகத் தள்ளப்பட்டது. பாஜக-தேமுதிக-பாமக அடங்கிய கூட்டணி இரண்டாம் இடத்தைப் பிடித்தன. இந்தத் தொகுதிகளைத் தவிர்த்து சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய தொகுதிகளில் திமுக இரண்டாமிடத்தைப் பிடித்தது.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கொங்கு மண்டலத்தில் உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 44 இடங்களை அதிமுக கைப்பற்றியது. திமுக கூட்டணி வெறும் 10 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதன் காரணமாகத்தான் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாமல் போனது.
இந்த சூழ்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே கொங்கு மண்டலத்தில் திமுக போட்டியிடுகிறது. கோவை சிபிஎம் கட்சிக்கும், திருப்பூர் சிபிஐ கட்சிக்கும், நாமக்கல் கொ.ம.தேகவுக்கும், ஈரோடு மதிமுகவுக்கும், கரூர் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குக் கொடுத்தது திமுகவின் தேர்தல் உத்திதான் என்ற கருத்தும் அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தனியரசு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, “சேலம் தொகுதியில் வேறு வழியில்லாமல்தான் திமுக போட்டியிடுகிறது என்று தெரிகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கும். அதிமுக ஆட்சி மேல் இருந்த வெறுப்பு எல்லாம் இப்போது மாறிவிட்டது. எனவே சுலபமாக திமுகவால் வெல்ல முடியாது. கொங்கு மண்டலத்தில் கடும் போட்டியை திமுக எதிர்கொள்ளும். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை திமுக வைத்துக்கொண்டு, கொங்கு மண்டல தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதன் மூலம் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்தார்.