இப்பல்லாம் எங்கே அரசியல் நடக்குது? வெறும் அரசியல் அசிங்கம்தான் நடக்குது என்ற மாஜி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, அவ்வளவு யோக்கியமான மனுஷன்னா, கட்சியை வெச்சு சம்பாதிச்ச கோடிகளை திருப்பிக் கொண்டாந்து கொட்டட்டும்.
தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் நீதி தவறினால், அவர்களை சவுக்கடி வார்த்தைகளில் விமர்சிக்க சற்றும் தயங்காதவையாக வார இதழ்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமான வார இதழொன்று, ‘கழிசடை அரசியலுக்கான மிகச் சரியான உதாரணம்’ என்று ஒரு அதிரடி அரசியல் புள்ளியை விமர்சித்தது. அந்த விமர்சனத்துக்காக பறந்து வந்தன பல பாராட்டுக் கடிதங்கள். இந்த தேசத்தில் கருத்துச் சுதந்திரம், பத்திரிக்கைச் சுதந்திரம் பக்காவாக இருக்கிறது! என்பதை காட்டிட இதைவிட பெரிய உதாரணம் எதுவும் தேவையில்லை.
வார இதழில் சாட்டை சுழற்றழுக்கு ஆளானவர், தி.மு.க.வின் மாஜி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா. ஏன் அப்படி விமர்சிக்கப்பட்டார்?....
அது தி.மு.க.வின் 2006-2011 காலகட்ட ஆட்சிக்காலம். ஈரோடு மாவட்டத்திலிருந்து எம்.எல்.ஏ.வாகி, அமைச்சராகியிருந்தார் என்.கே.கே.பி.ராஜா.

ஆக்சுவலாக செம்ம அதிரடியான அரசியல்வாதி அவர். அந்த அதிரடியானது கட்சி வளர்சிக்காக பயன்பட்டிருந்தால் கருணாநிதி மகிழ்ந்திருப்பார், ஆனால் ஆட்சியின் பெயரை சல்லி சல்லியாக நொறுக்கும் விவகாரமொன்றில் அவர் சிக்க, கடுப்பின் உச்சம் தொட்டார் கருணாநிதி. அதாவது ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ஒரு குடும்பத்தின் நிலத்தை அபகரிக்க ராஜா முயன்றார், அவர்கள் ஒத்து வராத நிலையில் குடும்பத்தினரை கடத்தினார், கடத்தப்பட்டவர்கள் டார்ச்சருக்கு ஆளானார்கள்… என்று நீண்டது அந்த விவகாரம்.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை துவக்கத்தில் மறுத்தார் ராஜா. இந்நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்த விவகாரத்தை மையப்படுத்தி கருணாநிதியின் ஆட்சியை மிக மிக கடுமையாக விமர்சித்துக் கொட்ட துவங்கியது. மக்கள் மனதிலும் ஒரு எரிச்சலுணர்வு தலைதூக்குவது போல் இருந்தது. அதன் பின் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஆட்சி மேலிடம் கண்ணசைக்க, போலீஸ் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதில் ஒரு கட்டத்தில் வழக்கு பாய்ந்து, தன் அமைச்சர் பதவியை இழந்தார் ராஜா. கைதும் ஆனார். அப்போது எழுந்த விமர்சனங்களில் வீரியமான ஒன்றுதான் நீங்கள் மேலே வாசித்தது.

அதன் பின் ஆட்சிகளும், காட்சிகளும் மாறின. விடுதலையான ராஜா கொஞ்சகாலம் அரசியல் செய்தார், அதன் பின் மெதுவாக மடைமாறினார், பின் கடந்த சில காலமாக ஆள் அரவமே இல்லாமல் இருக்கிறார். ஸ்டாலினுக்கு ராஜாவின் அரசியல் ஸ்டைலும், பர்ஷனல் போக்குகளும் பிடிக்கவே செய்யாது என்பதும் இதில் ஒரு காரணம். இந்நிலையில், மாநகராட்சி தேர்தல்கள் நெருங்கும் நிலையில், அவர் தி.மு.க. சார்பில் ஈரோட்டின் மாநகராட்சி மேயர் பதவிக்கு முயற்சிப்பதாக ஒரு தகவல் எழுந்துள்ளதாம். இது பற்றி அவரிடமே கேட்டிருக்கிறது பத்திரிக்கையாளர் தரப்பு. அதற்கு “தீவிர அரசியலைவிட்டு நான் ஒதுங்கி ஐந்து வருஷங்களாகிப் போச்சு. பட்டதெல்லாம் போதும். விவசாயம், தொழில்ன்னு ஜம்முன்னு இருக்கேன். சீட் கேட்கவுமில்ல, பணம் கட்டவுமில்லை. என்னோட ஆதரவாளர்கள் என்னைக்கும் என்னை மதிக்கிறாங்க, விரும்புறாங்க. அவங்க பார்க்க வருவாங்க. இப்படியே போய்க்க வேண்டிதான்.

இப்பல்லாம் எங்கே அரசியல் நடக்குது? வெறும் அரசியல் அசிங்கம்தான் நடக்குது.” என்று பொளேரென பதில் தந்திருக்கிறார்.
ஆனால் இதற்கு தி.மு.க.வினரோ “இவரோட அப்பாவையும், அதுக்குப் பிறகு இவரையும் அரசியல் பிரமுகர்களாக்கி, அமைச்சர் பதவி தந்தது தி.மு.க.தான். அதைவெச்சுக்கிட்டு ஏகபோகமா சம்பாதிச்சு சேர்த்து வெச்சிருக்காங்க. இப்ப என்னடான்னா புத்தர் மாதிரி பேசுறாரு! எதிர்க்கட்சிக்காரனே பாராட்டுற அளவுக்கு தலைவர் ஸ்டாலின் நல்லாட்சி தர்றாரு. இந்தாளு கண்ணுக்கு இது அசிங்க அரசியலா தெரிஞ்சா, இவர் கண்ணுலதான் கோளாறு. அவ்வளவு யோக்கியமான மனுஷன்னா, கட்சியை வெச்சு சம்பாதிச்ச கோடிகளை திருப்பிக் கொண்டாந்து கொட்டட்டும்.” என்று கொதிக்கின்றனர்.
யம்மாடியோவ்!
