"ஏன்.?  கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கவில்லை? குறைவான பாதிப்பு கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது எப்படி?", என்ற கேள்வியை திமுக உள்ளிட்ட  எதிர்கட்சிகள் எழுப்பி வருகின்றனர், இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இதே கேள்வியை கேட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து சமூக வளைதளத்தில்  திமுக அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கரன் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளார்:- அதில் , தமிழகத்திற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கேட்டிருக்கும் கேள்விக்கு அடுத்த  இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவும் போட்டிருக்கிறது .

 

இதற்கு மத்தியில் உள்ளவர்கள் பதில் அளிப்பார்களா..?  நிச்சயம் பதில் அளிக்க மாட்டார்கள். வாய்தா தான் வாங்குவார்கள். தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறது, என்பதை அவ்வப்போது மோடி அரசுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் போலும். தமிழகம் தரும் வருவாயை வாங்கிக் கொள்கிறது மத்திய அரசு. ஆனால் நிதியில் உரிய பங்கை தர மறுக்கிறது. தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத மாநிலத்தை பழி வாங்குவதாக அவர்களுக்கு எண்ணம் இருக்கலாம். அது எந்த நேரம் என்ற சிந்தனை கூட இல்லை என்பது தான் வேதனை. அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாநிலம் தமிழகம் என்று, தினம் தினம் மத்திய சுகாதாரத் துறை புள்ளி விபரம் தருகிறது.  ஆனால் இந்தப் புள்ளி விபரங்கள் நிதியை ஒதுக்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்ணிலும் படவில்லை, அதற்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி கண்ணிலும் படவில்லை என்பது தான் கொடுமை.பா.ஜ.க எம்.பிக்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டை ஆள்வது கூட்டணி கட்சியான அ.தி.மு.க என்பதையாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஞாபகப்படுத்தலாம். 

 ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி வசூலில் தமிழகத்திற்கு சேர வேண்டிய பங்கை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. இதை எடப்பாடி பழனிசாமியே கேட்டுள்ளார். பிரதமரோடு நடந்த காணொளிக் காட்சி விவாதத்தின் போது தமிழகத்திற்கு சேர வேண்டிய டிசம்பர் 2019 - ஜனவரி 2020 க்கான பாக்கியை கேட்டுள்ளார்.  பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், அக்டோபர் 2019 முதல் பாக்கி இருக்கும் ரூபாய் 6,752 கோடியை கோரியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் அக்டோபர் - நவம்பர் 2019க்கான பாக்கியான ரூபாய் 1,775 கோடியை கேட்டுள்ளது. மாநிலங்களுக்கு சேர வேண்டிய பங்கை தருவதில் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.  2019 - 2020 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருந்து வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரி ரூபாய் 65,281 கோடி. கொரோனாவுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூபாய் 996 கோடி.  நோயாளிகள் எண்ணிக்கை 234. 

2019-2020 ஆம் ஆண்டில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் இருந்து வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரி ரூபாய் 28,354 கோடி. கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 910 கோடி. நோயாளிகள் எண்ணிக்கை 179. 2019 - 2020 ஆண்டில் தமிழநாட்டில் இருந்து வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரி ரூபாய் 74, 430 கோடி. கொரானாவுக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூபாய் 510 கோடி. நோயாளிகள் எண்ணிக்கை 571. (நிதி ஒதுக்கிய போது இருந்த எண்ணிக்கை. இப்போதும் இதே விகிதத்தில் தான் தொடர்கிறது).மத்திய அரசுக்கு வருவாய் அளிக்கிற மாநிலத்திற்கு நிதியை குறைத்துக் கொடுப்பது என்பது பாரபட்சமான நடவடிக்கை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.