தமிழகத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக எல்லா அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முழுமையாக தயாராகிவிட்டது. அக்கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை திமுக இன்று அதிரடியாக அறிவித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் டி.ஆர்.பாலு தவிர்த்து துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா அந்தியூர் ப.செல்வராஜ், திமுக மகளிரணி  தலைவர்  கனிமொழி, கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு பல தரப்பினருடன் கலந்துரையாடி திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளது.