வரும் 16 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை காங்கிரஸ் கட்சியின் மத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இதற்கான அழைப்பிதழை ஸ்டாலின் டெல்லிக்கு சென்று சோனியாவிடம் நேரடியாக வழங்கினார். இதையடுத்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்படவுள்ள கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அவர்களிடைபே பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகள் பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தேசிய அளவில், காங்கிரஸ் தலைமையிலும், மாநில அளவில் திமுகவுடனும் கூட்டணி அமைப்பது குறித்து, சோனியா - ஸ்டாலின் சந்திப்பின்போது, விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், தி.மு.க., - முஸ்லிம் லீக் கட்சியும் சேர்த்து, 25 தொகுதிகளில் போட்டியிடும் என, ராகுலிடம், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உட்பட, 15 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க, தி.மு.க., முன் வந்துள்ளது. இதில், எட்டு முதல், 10 தொகுதிகளை காங்கிரஸ் எடுத்துக் கொள்ளவும், மீதமுள்ளவற்றை, கூட்டணி கட்சிகளுக்கு உள் ஒதுக்கீடாக அளிக்கவும், கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

காங்கிரசிற்கு கூடுதலாக சில தொகுதிகளை ராகுல் கேட்டபோது, குறுக்கிட்ட ஸ்டாலின், 'தி.மு.க.,வின் நட்பு கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.,விற்கான தொகுதிகளை, நாங்கள் உள் ஒதுக்கீடு வழங்கிக் கொள்கிறோம். 'எனவே, எங்களிடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்க வேண்டாம்' என, கூறியுள்ளார்.

தேசிய அளவில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், திமுக இடம் பெற்று விட்டதை, இந்த சந்திப்பு உறுதி செய்து உள்ளது. இந்த சந்திப்பை முன்னுதாரணமாக ஏற்று, மற்ற மாநில கட்சிகளும், காங்கிரசுடன், கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

'தி.மு.க., - காங்., கூட்டணி உறுதி செய்யப்படுவதால், மற்ற மாநில கட்சிகளால், மூன்றாவது அணி உருவாக்க முடியாது' என, தி.மு.க., மகளிரணி செயலர், கனிமொழி கூறியுள்ளார்.இதையடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டணி குறித்த பேச்ச வார்த்தைக்கு ஸ்டாலின் சோனியா சந்திப்பு ஒரு உத்வேகமாக அமையும் என்கின்றனர் அரசிய்ல் நோக்கர்கள்