பாஜகவில் இணையவில்லை என்று திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் கூறியிருப்பது, தமிழக சட்டப்பேரவையில் அவரை பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.வாக செயல்பட வைப்பதற்காக கடைசி நேரத்தில் பாஜக எடுத்த முடிவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசியலில் திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம்தான் நேற்றைய ஹாட் டாபிக். மு.க. ஸ்டாலின் 4 முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கு.க. செல்வம் பாஜகவில் சேரப்போகிறார் என்ற தகவல் திமுகவினரையும் தலைமையையும் கடும் அப்செட்டில் ஆழ்த்தியது. மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் இருந்த இடத்தைப் பிடிக்க ஆசைப்பட்ட கு.க.செல்வதுக்கு உதயநிதியின் தலையீட்டால், அந்தப் பதவி கிடைக்காமல் போக, இந்த ஜம்ப் முடிவுக்கு கு.க.செல்வம் வந்ததாக தகல்கள்கள் இறக்கைக்கட்டுகின்றன. இதற்கான அத்தனை வேலைகளையும் அண்மையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி மூலமே நடைபெற்றதாகவும் கூறுகிறார்கள்.


திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ. என்ற அதிர்வலையோடு பாஜகவில் முறைப்படி இணைய நினைத்திருந்த கு.க.செல்வத்தை கடைசி நேரத்தில் கட்சியில் இணைய வேண்டாம் என்று பாஜகவே அறிவுரைச் சொல்லியதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கு.க.செல்வம், “ நான் பாஜகவில் சேரவரவில்லை” என்று சொல்லியதோடு உப்புச்சப்பில்லாத ஒரு காரணத்துக்காக வந்ததாக தெரிவித்தார். ஒரு கட்சியின் எம்.எல்.ஏ. எதையெல்லாம் பேசினால், தலைமை வெறுக்குமோ அதையெல்லாம் பேசிய கு.க. செல்வம், ‘முடிந்தால் கட்சியை விட்டு நீக்கட்டும்’ என்றும் பேசி அதிர வைத்தார்.
ஒரு கட்சி எம்.எல்.ஏ. வேறொரு கட்சிக்கு சென்றால், அவர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தக் கட்சி சபாநாயகரிடம் முறையிட்டால், அந்த எம்.எல்.ஏ.வின் பதவியைப் பறிக்க முடியும். ஆனால், அதே எம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு அக்கட்சி தலைமை நீக்கினால், சட்டப்பேரவையில் எந்தக் கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்பட முடியும். வேறு கட்சியின் குரலாகவும் ஒலிக்க முடியும். இதற்கு கடந்த காலங்களில் உதாரணங்கள் உள்ளன.
கடந்த 2006- 11ல் மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர், ஜெயகொண்டம் எம்.எல்.ஏ. ஆகியோர் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பிறகு திமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்களைப் போல செயல்பட்டனர். இந்த எம்.எல்.ஏ.க்கள் திமுக பொதுக்குழுவிலும்கூட பங்கேற்று அதிர வைத்தனர். இதேபோல 2011-16 காலகட்டத்தில் தேமுதிக எம்.எம்.ஏ.க்கள் 10 பேர் வரிசையாக ஜெயலலிதாவை தொகுதி மேம்பாட்டுக்காகச் சந்தித்தாகக் கூறி, பேரவையில் அதிமுக ஆதரவாளர்களாக செயல்பட்டனர். இவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு 3-ல் 1 பங்கு அளவுக்கு இருந்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் விஜயகாந்த் தயங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைப்பதற்காகவும் விஜயகாந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போது பேசப்பட்டது.