மார்ச், 1ல், கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், மோடி மற்றும் முதல்வர், இபிஎஸ், -  ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த அணிக்கு போட்டி யாக, மார்ச், 3ல், விருதுநகரில், திமுக, சார்பில் நடக்கும் பேரணி மற்றும் தென் மண்டல தேர்தல் மாநாட்டில், காங்கிரஸ் பொதுச்செயலர், பிரியங்கா உள்ளிட்ட, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.மார்ச், 4ல், லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டால், மத்தியில் உள்ள, பிஜேபியின் ஆட்சி அதிகாரத்திற்கு மவுசு குறைந்து விடும் என்ப தால், மாநில கட்சிகளுடனான கூட்டணியை உறுதி செய்வதில், பிஜேபி மேலிடம் அவசரம் காட்டி வருகிறது.சமீபத்தில், பிஜேபி தேசிய தலைவர், அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பியுஷ் கோயல், நிதின் கட்கரி ஆகிய மூவரும்,  தமிழகத்தில்  கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை, அதிமுக, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி தனியாக சந்தித்து பேசினர். அப்போது, அதிமுக, தலைமையில், பிஜேபி - பாமக, - தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகள் சேர்ந்து, மெகாகூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

பிஜேபிக்கு ஏழு தொகுதிகளும்,பாமக, தேமுதிகவுக்கு, தலா, நான்கு தொகுதிகளும் ஒதுக்குவது பற்றி பேசப்பட்டுள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, மொத்தம், 40 தொகுதிகளில், அதிமுக, - 25 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், 15 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பது என்றும் முடிவாகியுள்ளது.

இதில், கொங்குமண்டலத்தில், பிஜேபிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் மட்டும், இழுபறி நீடிக்கிறது. எனினும், தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள், அதிமுக, அணி பேச்சில் உடன்பாடு எட்டப்படும் என, தமிழக, பிஜேபி, கருதுகிறது.

மார்ச் முதல் வாரத்தில் குமரியில், பிஜேபி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில், மோடி பங்கேற்கிறார். அந்த மேடையில்,  இ.பி.எஸ், பன்னீர்செல்வம்,  ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி தலை வர்களை கைகோர்க்க வைக்க, பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சி எடுத்து உள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ், மதிமுக இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக உடனான உடன்பாட்டை இறுதி செய்ய, திமுகவும் தயாராகி வருகிறது.

கூட்டணி முடிவானதும், அதே மார்ச் முதல் வாரத்தில் ஓரிரு நாள் இடைவேளையில் விருதுநகரில் பிரமாண்டப் பேரணி மற்றும் தென் மண்டல தேர்தல் மாநாட்டை நடத்த, திமுக, முடிவு செய்துள்ளது. அந்த கூட்டத்துக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர், பிரியங்கா காந்தியை அழைக்க, முக ஸ்டாலின் விரும்புகிறார். அதற்காக, வரும், 26ம் தேதி, டெல்லி செல்கிறார் ஸ்டாலின். அங்கு, 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பேசுகிறார்.

அதில், குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, திமுக, வின் கருத்தை வலியுறுத்த உள்ளார். அந்தக் கூட்டம் முடிந்த பின், ராகுல் காந்தி, பிரியங்காவை சந்தித்து, தமிழகம் வரும்படி அழைப்பு விடுக்கிறார். பிரியங்கா காந்தியின் வருகையை உறுதி செய்து, சென்னை திரும்ப, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். எனவே, மார்ச் முதல் வாரம், தமிழக அரசியலில் அதிரடிகள் அதிகம் இருக்கும் என தெரிகிறது.